×

கூலிங் வாட்டர், சொகுசு மெத்தை என ஜாலி; ஆள் இல்லாத வீட்டில் புகுந்து ஹாயாக தூங்கிய வாலிபர்: நாகர்கோவிலில் போலீசுக்கு தலைவலி

நாகர்கோவில்: நாகர்கோவிலில் ஆள் இல்லாத வீட்டுக்குள் புகுந்து மெத்தையில் படுத்து தூங்கிய வாலிபர், வெளியேற மறுத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதமும் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் வடசேரி பள்ளிவிளை பகுதியை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் வெளிநாட்டில் உள்ளார். இவருக்கு சொந்தமான வீடு பள்ளிவிளை பகுதியில் உள்ளது. குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வரும் போது, இந்த வீட்டில் வந்து தங்குவது வழக்கம். வீடு தரை தளம் மற்றும் முதல் தளம் என பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த வீட்டின் மாடி கதவு திறந்து கிடந்தது. உள்ளே மின் விளக்குகளும் எரிந்தன. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அதே பகுதியில் வசித்து வரும் இன்ஜினியரின் உறவினர் ஒருவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கொள்ளையர்கள் தான் புகுந்து இருப்பார்களோ? என்ற அச்சத்தில், உடனடியாக வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் கூறினார்.

இரவு நேர ரோந்து பணியில் இருந்த வடசேரி போலீசார் உடனடியாக அந்த வீட்டை முற்றுகையிட்டனர். போலீசார் கீழே நின்று பார்த்த போது மாடி அறையில் மர்ம நபர் இருப்பதும், மின் விளக்குகள், பேன் ஓடுவதும் உறுதியானது. உடனடியாக வீட்டின் மாடி வழியாக போலீசார் மிகுந்த பதற்றத்துடன் உள்ளே சென்றனர். கொள்ளையர்கள் ஏதாவது ஆயுதங்கள் வைத்திருந்தால் தாக்குதல் நடத்தி விடக் கூடாதே? என்ற அச்ச உணர்வுடன் மாடி அறையை போலீசார் நெருங்கினர். மாடி கதவை திறந்து உள்ளே சென்ற போலீசார் கண்ட காட்சி அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. மாடியில் உள்ள படுக்கை அறையில் உள்ள மெத்தையில் கால் மேல் கால் போட்டு வாலிபர் ஹாயாக.. படுத்திருந்தார். போலீசார் வருவது கூட தெரியாமல், நன்றாக அயர்ந்த தூக்கத்தில் இருந்த அவரிடம், தம்பி எழுந்து வாங்க … யார் நீங்க.. என போலீசார் கேட்டனர். கண் விழித்த அந்த வாலிபர் போலீசாரை பார்த்து நீங்கள் யார்?

என ஆங்கிலத்தில் கேட்டார். அடுத்தவர் வீட்டில் வந்து படுத்து விட்டு போலீசாரை பார்த்து யார் என கேட்கிறீயா என கூற, அடுத்தவர் வீடா.. என்ன பேசுறீங்க. இது என் வீடு என ஆங்கில உச்சரிப்பில் போலீசாரை வறுத்தெடுத்தார். வில்லங்கம் நம்மை தேடி வந்துருக்கு என நினைத்த போலீசார், சிறிது நேரம் செய்வதறியாமல் நின்றனர். பின்னர் அந்த வீட்டின் உரிமையாளரின் உறவினரிடம் கூறி, வீட்டில் ஏதாவது திருட்டு போய் உள்ளதா? என பாருங்கள் என்றனர். அவரும் வீடு முழுவதும் பார்த்தார். வீட்டில் பொருட்கள் எதுவும் கை வைத்தது போல் தெரிய வில்லை. பிரிட்ஜ் மட்டும் ஆன் செய்யப்பட்டு இருந்தது. கூலிங் வாட்டர் குடிக்க பிரிட்ஜை ஆன் செய்திருக்கலாம் என தெரிகிறது.

இதையடுத்து அந்த வாலிபரை நைசாக பேசி, காவல் நிலையம் வரை வந்து உங்கள் வீடு தான் எழுதி தந்து விட்டு செல்லுமாறு கூறினர். நான் ஏன்? வர வேண்டும். என்னால் வர முடியாது என்றார். பின்னர் அவரிடம் நைசாக பேசி, வெளியே அழைத்து வந்த போலீசார் குடும்ப விபரங்களை கேட்டனர். அப்போது நாகர்கோவில் ராமன்புதூரில் உள்ள தனது சகோதரர் செல்போன் நம்பரை கூறினார். இதையடுத்து அவருக்கு போன் செய்து வரவழைத்தனர். அப்போது தான் இந்த வாலிபர், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. வீடுகளின் மாடிகளில் நடமாடி, வெளியே இருக்கும் பொருட்களை தூக்கி சென்று விடுவார். அதை விற்று கிடைக்கும் பணத்தில் மது அருந்துவார்.

ஏதாவது வீடுகளில் மாடி அறையை திறக்க முடிந்தால், அந்த மாடி வழியாக வீட்டுக்குள் நுழைந்து இரவில் தங்கி விடுவார் என்பது தெரிய வந்தது. இந்த வீட்டில் கடந்த ஒரு வாரமாக அவர் வந்து தங்கி சென்றதும் தெரிய வந்தது. முதலில் உறவினர் என பக்கத்தில் உள்ள சிலர் நினைத்துள்ளனர். போலீசார் நேற்று அந்த வாலிபரை பிடித்த போது தான் பலருக்கு விஷயம் தெரிய வந்தது. பின்னர் அந்த வாலிபரை, அவரின் சகோதரருடன் அனுப்பி வைத்தனர். பிரண்மாடமாக வீடு கட்டி பூட்டி போட்டு விட்டு வெளிநாட்டில் என்ன செய்கிறார்கள்? என்ற வேதனையுடன் போலீசார் அங்கிருந்து கிளம்பினர்.

The post கூலிங் வாட்டர், சொகுசு மெத்தை என ஜாலி; ஆள் இல்லாத வீட்டில் புகுந்து ஹாயாக தூங்கிய வாலிபர்: நாகர்கோவிலில் போலீசுக்கு தலைவலி appeared first on Dinakaran.

Tags : Walliber ,Nagarkovil ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம்