×

அலங்கார பணிகள் தீவிரம் அழகர்கோவிலில் நாளை ஆடித்தேரோட்டம்

அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித்தேரோட்டம் நாளை (ஆகஸ்ட் 1) நடைபெறுகிறது. இதற்காக தேரை அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருந்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து தினந்தோறும் அன்னம், சிம்மம், அனுமார், கருடன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நாளை (ஆகஸ்ட் 1) காலை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக கோயில் அருகே தேருக்கான பாதுகாப்பு கூண்டுகள் அகற்றப்பட்டு அதனை அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

சக்கரங்கள் வண்ணம் தீட்டப்பட்டு, தேரின் துணி சாரங்களும், வண்ண திரைச்சீலைகளும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த திரைச்சீலைகளில் பெருமாளின் பத்து அவதாரங்களும் பல வண்ணங்களில் கை வேலைப்பாடாக இடம் பெற்று அழகுற காட்சியளிக்கிறது. கோயில் கோட்டை வாசல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தேர் பவனி நடைபெறும் நான்கு மாட வீதிகளிலும், ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாளை தேரோட்டம் நடைபெற உள்ளதால், 2 மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில், 7 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் பாதுகாப்பு பணியில் 800 போலீசார் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் துணை ஆணையர் ராமசாமி தலைமையில் கண்காணிப்பாளர்கள் பிரதிபா, அருள்செல்வன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

The post அலங்கார பணிகள் தீவிரம் அழகர்கோவிலில் நாளை ஆடித்தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Alagharkovil ,Alagharkoil ,Sundararaja Perumal ,Alaghar ,
× RELATED அழகர்கோவிலில் வசந்த விழா மே 14ல் துவக்கம்