×

குப்பையில் வீசிய அழுகிய பழங்களை சேகரித்து 5,000 மாம்பழ கன்றுகள் உற்பத்தி செய்து அசத்தல்: ஊரை பசுமையாக்க மலிவு விலையில் விற்பனை

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பேரூராட்சியில் குப்பையில் வீசப்படும் மாம்பழங்களை சேகரித்து பேரூராட்சி வள மீட்பு பூங்காவில் நட்டு 5,000 மாங்கன்றுகள் உற்பத்தி செய்துள்ளனர். ஊரை பசுமை நகரமாக்க மாங்கன்றுகளை அசல் விலைக்கு பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் சுமார் 7 ஆயிரம் வீடுகள் உள்ளன. 25,000 பேர் வசிக்கின்றனர். கொடைக்கானல் மலை அடிவாரத்தில் உள்ள வத்தலக்குண்டு சுற்றி மஞ்சள் ஆறு, வைகை ஆறு, மருதாநதி ஆகியவை செல்கின்றன.

விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டவர்களும், விவசாயம் சார்ந்த தொழிலாளர்களும் அதிக அளவில் வசிக்கின்றனர். வத்தலக்குண்டுவில் கடந்த நூற்றாண்டின் முன்பகுதியில் அதிக அளவில் வெற்றிலை விவசாயம் நடந்து வந்தது. அதனாலயே ஊர் வெற்றிலை குன்று என்று பெயர் பெற்றது. நாளடைவில் அது மருவி வத்தலகுண்டு ஆனது. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் வெற்றிலை விவசாயம் பல்வேறு வினோத நேரய்களால் நலிவுற்றது.

தற்போது வத்தலக்குண்டுவில் 2 வெற்றிலை கொடிக்கால்கள் மட்டுமே உள்ளன. இருந்த போதிலும் ஊரின் அடையாளத்தை காக்க வேண்டும் என்பதற்காக வத்தலகுண்டு பேரூராட்சியினர் பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் வெற்றிலைக் கொடி உற்பத்தி செய்து ஊர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். ஏராளமான வீடுகளில் ஊரின் அடையாளமான வெற்றிலை கொடி படர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது கடந்த சில மாதங்களாக மாம்பழ விலை வீழ்ச்சி அடைந்தது. அதைத்தொடர்ந்து வேன்களில் வைத்து 50 ரூபாய்க்கு 3 கிலோ மாம்பழம் என்று கூவி கூவிவிற்றனர்.

சில விவசாயிகள் மாம்பழ விலை அதல பாதாளத்திற்கு சென்றதால் சாலையில் மாம்பழங்களை வீசிச் சென்றனர். இதனால் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிக அளவில் மாம்பழக் கழிவுகள் சேர்ந்தன. ஏற்கனவே முக்கால்வாசி பசுமை நகரமாக உள்ள வத்தலக்குண்டுவை முழுமையான பசுமை நகரமாக்க என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம் ஆகியோர் திமுக ஒன்றிய செயலாளர் கேபி.முருகன், நகரச் செயலாளர் சின்னதுரை ஆகியோருடன் கலந்து ஆலோசித்தனர்.

அதைத்தொடர்ந்து பேரூராட்சி பணியாளர்கள் மூலம் மாம்பழக் கழிவுகளை சேகரித்து நடுத்தெரு அருகே உள்ள பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவுக்கு கொண்டு வந்தனர். அதில் மாம்பழ கொட்டையை தனியே எடுத்து பதப்படுத்தி விதையாக்கி வளமீட்பு பூங்காவில் நட்டனர். அதை தொடர்ந்து 5 ஆயிரம் மாங்கன்றுகள் உற்பத்தியானது. இதை கொண்டு ஊரை முழுமையான பசுமை நகராக்க 5 ஆயிரம் மாங்கன்றுகளை பயன்படுத்த முடிவு செய்தனர். வத்தலக்குண்டு பகுதி விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மாங்கன்றுகளை அசல் விலைக்கு வழங்க முடிவு செய்து உரிய பிரச்சாரம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து விவசாயிகளும், பொதுமக்களும் மாங்கன்றுகளை வரிசையில் வந்து நின்று வாங்கி சென்றனர். அனைவருக்கும் மாங்கன்றுகள் வழங்கப்பட்டது. வாங்கிச் சென்ற விவசாயிகள், பொதுமக்கள் மாங்கன்றுகளை அவரவர் இடத்தில் நட தொடங்கியுள்ளனர். இதனால் சில ஆண்டுகளில் வத்தலக்குண்டு நகரம் முழுமையான பசுமை நகரமாகும் என்று பேரூராட்சியினர் கூறுகின்றனர்.

மேலும் வளமீட்பு பூங்காவில் மாங்கன்று மட்டுமின்றி ஏற்கனவே வளர்க்கப்படும் முருங்கை, வாழை, நாவல் மரக்கன்றுகளும், ரணகள்ளி, துளசி, நொச்சி, கரிசலாங்கண்ணி போன்ற மூலிகைச் செடி நாற்றுகளும், மல்லிகை, செம்பருத்தி, குரோட்டன்ஸ் போன்ற பூ வகை நாற்றுக்களும் அடக்க விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அவரவர் தங்களுக்கு தேவையான கன்றுகளை மற்றும் நாற்றுகளை பெற்று சென்று வளர்க்கலாம் என்று கூறியுள்ளனர். இதன் மூலம் சில ஆண்டுகளில் வத்தலக்குண்டு முழுமையான பசுமை நகரமாக மாறும் என்று பேரூராட்சியினர் கூறுகின்றனர்.

இது குறித்து இயற்கை ஆர்வலர் சித்திக் கூறுகையில்:
ஊரை சுற்றி கொடைக்கானல் மலை, தாண்டிக்குடி மலை போன்று பல மலைகள் இருக்கின்றன. மூன்று ஆறுகள் ஊரை சுற்றி செல்கின்றன. அவ்வப்போது மழையும் பெய்கிறது. ஆனால் வெயிலின் உக்கிரம் தாங்க முடியவில்லை. வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க ஊரை முழுமையான பசுமை நகரமாக மாற்றியாக வேண்டும். அதற்கு பேரூராட்சி எடுக்கும் முயற்சிக்கு உதவிடும் வகையில் விவசாயிகள் பேரூராட்சி அடக்க விலையில் வழங்கும் கன்றுகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும் என்றார்.

The post குப்பையில் வீசிய அழுகிய பழங்களை சேகரித்து 5,000 மாம்பழ கன்றுகள் உற்பத்தி செய்து அசத்தல்: ஊரை பசுமையாக்க மலிவு விலையில் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Vatthalakundu ,Vatthalakundu Municipality ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...