×

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை வளாகத்தில் மனநல சேவை மையம் விரைவில் திறப்பு: நட்புடன் உங்களோடு திட்டத்துக்கு மக்களிடம் வரவேற்பு, அதிகாரிகள் தகவல்


நட்புடன் உங்களோடு திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தகட்டமாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை வளாகத்தில் மனநல சேவை மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2021 புள்ளி விவரப்படி, தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 18,295 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடன் தொல்லை, வீட்டு பிரச்னை என பல காரணங்கள் இருந்தாலும், மனஅழுத்தமே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான், பொதுமக்கள் தற்கொலைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சுகாதாரத்துறை, ‘நட்புடன் உங்களோடு’ என்ற மனநல சேவை மையத்தை கடந்தாண்டு அக்டோபர் 27ம் தேதி ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் தொடங்கியது. இதற்கான பிரத்யேக தொடர்பு எண் 14416. இந்த உதவி மையம் மக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த சேவை மனநல மருத்துவர் தலைமையிலான 20 மனநல ஆற்றுப்படுத்துனர்களை கொண்ட குழுவால் ஆலோசனை 24 மணிநேரமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சேவைகள் மேம்படுத்தப்பட்டு, மாவட்ட அளவில் மாவட்ட மனநல திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

அதேபோல, பொதுமக்களிடம் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நட்புடன் உங்களோடு மனநல சேவை விழிப்புணர்வு காணொலியும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்தாண்டு டிசம்பர் 22ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. குறிப்பாக, இந்த உதவி மையத்தில் சராசரி தினசரி 95 அழைப்புகள் கையாளப்படுகின்றன. இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஒரு வருடத்திலேயே மக்களிடயே நல்ல வரவேற்பு உள்ளதால் அடுத்தகட்டமாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தேசிய நல்வாழ்வு குழுமம் இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியதாவது:

அன்றாடம் மனதில் ஏற்படும் மாற்றங்கள், உடல்ரீதியான பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் மனஅழுத்தம் ஏற்பட்டு தாங்கள் தனிமையில் உள்ளதாக சிலர் நினைக்கின்றனர். அந்த தனிமை அவர்களை தற்கொலைக்கு தூண்ட வழி வகுக்கும். இதை தடுக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டது. எங்கள் ஆற்றுப்படுத்துனருக்கு அனைத்து வகையான பயிற்சிகளும் அளித்து வருகிறோம், அவர்கள் மனநல சேவைக்கு அழைப்பவர்களிடம் அவர்களின் பிரச்னை குறித்து பேசுகின்றனர். அதற்கு தீர்வு சொல்கிறார்கள். போதைக்கு அடிமையானவர்கள் கூட சில நேரங்களில் அழைக்கின்றனர். அவர்களுக்கும் உதவியாக நாங்கள் இருக்கிறோம்.

மனஅழுத்தம் உடையவர்கள் தங்களது பிரச்னையை செல்போன் மூலம் தயக்கமின்றி கூறுவதால் அதன் மூலம் அவர்களுக்கு ஆலோசனைகளை எளிதில் வழங்கலாம். தற்போது டி.எம்.எஸ் வளாகத்தில் ஒரு மையம் செயல்பட்டு வருகிறது. அடுத்த மையம் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ வளாகத்தில் அமைய இருக்கிறது. அங்கு அமைய இருக்கும் மையத்தில் அதிக மனநல மருத்துவர்கள் இருப்பார்கள். அதனால் விரைவில் மக்களுக்கு சேவை வழங்கலாம். அதன்படி, அந்த புதிய மையத்தின் பணிகள் தீவிரமாக செய்யபட்டுவருவதால் விரைவில் அதனை பொதுமக்களின் செயல்பாட்டிற்காக கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல, மனநலம் பாதிப்புகள் தொடர்பாக பல்வேறு வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம், மனம் என்ற திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். அதுமட்டுமன்றி கர்ப்பிணி மற்றும் குழந்தை பெற்றெடுத்த பெண்களும் மன அழுத்தம் அடைகின்றனர். இதை தொடக்கத்திலேயே சரி செய்ய செவிலியர் மூலம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் பள்ளி மாணவர்களின் மனநல சேவையை எவ்வாறு பரிசோதனை செய்ய வேண்டும் என ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு அவர்களின் நிலை விளக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை வளாகத்தில் மனநல சேவை மையம் விரைவில் திறப்பு: நட்புடன் உங்களோடு திட்டத்துக்கு மக்களிடம் வரவேற்பு, அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Obey Psychiatric Hospital Campus Psychiatric Service Center ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டுகால...