×

கோலாரிலிருந்து ராஜஸ்தானுக்கு தக்காளி ஏற்றிச் சென்ற லாரி மாயம்: போலீசார் விசாரணை

கோலார்: கோலாரிலிருந்து ராஜஸ்தானுக்கு தக்காளி ஏற்றிச்சென்ற லாரி மாயமானதாக தக்காளி மண்டி உரிமையாளர் கோலார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.சமீப காலமாக உணவுப்பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளது. தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு ஆகிய அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. அதிலும் தக்காளியின் விலை தான் கொஞ்சம் கூட குறையாமல் கூடிக்கொண்டே இருக்கிறது.தக்காளி விலை உயர்வு காரணமாக, தக்காளியை திருடுவது, தக்காளி பாதுகாப்புக்கு விவசாயிகள் பணியாட்களை நியமிப்பது, மணமகளுக்கு திருமண சீர்வரிசையில் தக்காளியையும் வைப்பது என சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்து வருகின்றன.

அதேவேளையில், தக்காளியை நஷ்டத்திற்கு விற்று கடனில் இருந்து வந்த தக்காளி விவசாயிகள் இப்போது தக்காளி நல்ல விலைக்கு விற்பனையாவதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தக்காளி விலையுயர்வு காரணமாக பல பகுதிகளில் தக்காளி திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், கடந்த 27ம் தேதி கோலாரிலிருந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு ரூ.21 லட்சம் மதிப்புள்ள தக்காளியை ஏற்றிச்சென்ற லாரி மாயமாகியுள்ளது. அந்த லாரி ஓட்டுநரை தொடர்புகொள்ள முடியவில்லை. லாரி எங்கே இருக்கிறது என்றும் தெரியவில்லை. அதனால் தக்காளி மண்டி உரிமையாளர் இதுதொடர்பாக கோலார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த கோலார் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தக்காளி விலை அதிகமாக விற்கப்படுவதால், தக்காளி ஏற்றிச்சென்ற லாரியை யாரும் கடத்தினரா அல்லது லாரி ஓட்டுநரே தக்காளியை விற்பனை செய்வதற்காக தொடர்புகளை துண்டித்தாரா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

The post கோலாரிலிருந்து ராஜஸ்தானுக்கு தக்காளி ஏற்றிச் சென்ற லாரி மாயம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Lorry ,Kolar ,Rajasthan ,Dinakaran ,
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது