×

மஞ்சூர் சாலையோரம் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற வலியுறுத்தல்

மஞ்சூர், ஜூலை 30: நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து ஊட்டி, குன்னூர், கோரகுந்தா, அப்பர்பவானி, கிண்ணக்கொரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மற்றும் எமரால்டு, அவலாஞ்சி பகுதிகளுக்கு செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளது. இவற்றில் பெரும்பாலான மரங்கள் பல ஆண்டுகள் வயதாகியும், பட்டுப்போயும் காணப்படுகிறது. இதனால் காற்று, மழை உள்ளிட்ட சமயங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுகின்றன. குறிப்பாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையின்போது அதிகளவில் மரங்கள் விழுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் வாகனப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு பொதுமக்கள், அரசு தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக மீண்டும் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மரங்கள் விழும் அபாயம் உள்ளது. சமீபத்தில் கிண்ணக்கொரை சாலையில் 3 இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. எனவே மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சாலையோரங்களில் விழும்நிலையில் அபாயகரமாக உள்ள மரங்கள் குறித்து ஆய்வு செய்து இவ்வாறான மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

The post மஞ்சூர் சாலையோரம் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Manjur road ,Manjoor ,Nilgiris district ,Ooty ,Coonoor ,Korakunda ,Apparbhavani ,Kinnakorai ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்