×

பட்டாபிராம் சிடிஎச் சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் தீவிரம்: செப்டம்பரில் திறக்க ஏற்பாடு

ஆவடி, ஜூலை 30: பட்டாபிராம் சிடிஎச் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, செப்டம்பரில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதியான பட்டாபிராம், திருநின்றவூர் பகுதிகள், அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி மற்றும் திருவள்ளூர் பகுதிகளை இணைக்கும் திருப்பதி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு ஆவடியில் இருந்து மிலிட்டரி சைடிங் பகுதிக்கு ரயில்வே பாதை செல்கிறது. இந்த ரயில்வே கேட் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மூடப்படுகிறது.

காலை நேரங்களில் அதிகமாகவே மூடப்படுகிறது. ரயில் சென்று வரும் போது சுமார் 10 நிமிடங்களுக்கு கேட் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்படுவதால், ரயில்வே கேட்டின் இருபுறமும், அரசு பேருந்துகள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என நீண்ட தூரம் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பது வாடிக்கையாக உள்ளது. மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்றால் 5 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், அவசர காலங்களில் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பட்டாபிராம், சி.டி.எச் சாலை, ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்தது.

அதன்பேரில், கடந்த 2010ம் ஆண்டு இங்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. 4 வழிச்சாலையாக, ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் நிதியும் ஒதுக்கப்பட்டது.
கடந்த 2016ம் ஆண்டு தொடக்கத்தில் மேம்பாலம் கட்ட மண் பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் இதற்காக அரசு சார்பில் ₹38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் மேம்பால பணிகளை முடிக்க ₹52 கோடி நிதி தேவை என்ற நிலை ஏற்பட்டது. அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த பட்டபிராம் மேம்பாலம், இரு முனைகளிலும், துவக்கத்தில் இணைந்தும், நடுப்பகுதியில் இரு வேறு திசையில் பிரிந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு 2018ம் ஆண்டு முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், பணிகள் அப்போது மெதுவாக நடந்தன. இதனிடையே, கொரோனா காலகட்டத்தில் பணிகள் அப்படியே முடங்கின. இந்நிலையில் மக்கள் நீண்ட நேரம் ரயில்வே கேட்டில் காத்திருப்பதை தவிர்க்கவும், மேம்பால பணிகளை விரைவாக முடிக்கவும் கடந்த 2021ம் ஆண்டு பட்டாபிராம் காவல் நிலையம் அருகில் இருந்து போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

2 ஆண்களாக பேருந்து உள்ளிட்ட வாகனங்கள், சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றன. பட்டாபிராமில் இருந்து திருநின்றவூர் செல்ல 5 நிமிடங்களே போதும் என்கிற நிலையில், 5 கிலோ மீட்டர் சுற்றி செல்வதால் தற்போது 30 நிமிடங்கள் வரை ஆகிறது. பட்டபிராம் மேம்பால பணிகள் முடிந்தால் மட்டுமே அந்த பகுதி இயல்பு நிலையை அடையும் என்கிற நிலை உள்ளது. இந்நிலையில் இந்த மேம்பாலத்தை விரைவாக கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதுபற்றி பதில் அளித்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் பட்டாபிராமில் அமைக்கப்பட்டு வரும் பாலப் பணிகளில் ஒரு வழிப்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும், என்று தெரிவித்துள்ளார்.

The post பட்டாபிராம் சிடிஎச் சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் தீவிரம்: செப்டம்பரில் திறக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Pattabram CDH Road ,Avadi ,
× RELATED ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட...