×

சித்தூர் விவசாயி குஷி 45 நாளில் ரூ.4 கோடி வருமானம் தக்காளியால் வந்தது ஜாக்பாட்

கோலார்: தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஆந்திராவை சேர்ந்த முரளி என்ற விவசாயி, கர்நாடக மாநிலம் கோலாரில் தனது தக்காளியை விற்று வெறும் 45 நாட்களில் ரூ.4 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். தக்காளியை நஷ்டத்திற்கு விற்று கடனில் இருந்து வந்த தக்காளி விவசாயிகள் இப்போது மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். அந்தவகையில், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த முரளி என்ற 48 வயது விவசாயி, கோலாரில் தக்காளி விற்று வெறும் 45 நாட்களில் ரூ.4 கோடி சம்பாதித்துள்ளார்.

தனது குடும்ப சொத்தான 12 ஏக்கரில் விவசாயம் செய்துவந்த முரளி, அதன்பின்னர் தனது சொந்த சம்பாத்தியத்தில் 10 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார். மொத்தமாக இந்த 22 ஏக்கரில் தக்காளி விவசாயம் செய்வதற்கு விதை, உரம், தொழிலாளர்களுக்கு ஊதியம், போக்குவரத்து செலவு ஆகியவற்றுக்கு செய்த செலவுக்கு ஏற்ற வருவாய் கிடைக்காததால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.1.5 கோடி நஷ்டமடைந்துள்ளார். அந்த கடனை அடைக்க ஏதுவாகவும், அந்த இழப்பை ஈடுகட்டும் விதமாகவும் இந்த ஆண்டு ஜூலை மாதம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டியுள்ளார்.

தனது வயலில் விளைந்த தக்காளியை விற்பனை செய்வதற்காக 130 கிமீ தூரம் பயணம் செய்து கோலாரில் பல பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்துள்ளார். ஏபிஎம்சி யார்டில் தக்காளிக்கு நல்ல விலை கிடைப்பதை அறிந்து கோலாருக்கு வந்த விவசாயி முரளி, தக்காளியை விற்றதன் மூலம் 45 நாட்களில் ரூ.4 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். இந்த வருவாயின் மூலம் தனது பழைய கடனை அடைத்த விவசாயி முரளி, இதுவரை தக்காளி மூலம் இப்படியொரு வருவாய் கிடைத்ததில்லை என்றும், இதில் கிடைத்த லாபத்தை மீண்டும் விவசாயத்திலேயே முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 20 ஏக்கர் விளைநிலத்தை வாங்கி, நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் தோட்டக்கலை விவசாயம் செய்யவுள்ளதாக முரளி தெரிவித்துள்ளார்.

The post சித்தூர் விவசாயி குஷி 45 நாளில் ரூ.4 கோடி வருமானம் தக்காளியால் வந்தது ஜாக்பாட் appeared first on Dinakaran.

Tags : Khushi ,Kolar ,Murali ,Andhra Pradesh ,Kolar, Karnataka ,
× RELATED பிறந்தநாள் பார்ட்டியில் ரவுடிகளுக்குள் மோதல்: ஒருவருக்கு அரிவாள் வெட்டு