×

மணிப்பூரில் எம்.பி.,க்கள் குழு

மணிப்பூரில் மெய்தீஸ், குக்கி ஆகிய இரு சமூகத்தினரிடையே கடந்த மே 3ம் தேதி ஏற்பட்ட மோதல், கலவரமாகி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கொடூரத்தின் உச்சமாக, பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வெறியாட்டமாடியிருக்கிறார்கள் அரக்க மனம் படைத்த சிலர். மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜ முதல்வரான பிரேன்சிங், கலவரத்தின் போது, இதுபோல் பல நிர்வாண ஊர்வலங்கள் நடந்துள்ளது, அதனால் தான் இணைய சேவையை தடை செய்தோம் என விளக்கமளிக்கிறார். மறுபுறத்தில் ஒன்றிய அரசும், பிரதமரும் மணிப்பூர் விவகாரத்தில் மவுனமாக இருந்து, கலவரம் அதிகரிக்க காரணமாகி இருக்கிறார்கள், ஆளும் பாஜ அரசின் மவுனத்தால், மக்கள் அழிவதை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்க்கின்றன. தொடர்ந்து மக்கள் விரோத செயலை மேற்கொள்ளும் பாஜ அரசை வீழ்த்த 26 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியிருக்கிறது. பாட்னா, பெங்களூரு என இரு இடங்களில் தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின் இக்கூட்டணி, பாஜவை வலுவாக எதிர்த்து நிற்கிறது.

கடந்த 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தில், ஒற்றை கோரிக்கையாக மணிப்பூர் விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி வருகிறது. ஆளும் அரசு அதற்கு செவி சாய்க்காமல், எதிர்வினையாற்றும் நிலையிலும் மணிப்பூர் கலவரம், வன்கொடுமைக்கான நீதி, அதனை கட்டுப்படுத்த தவறியவர்கள் மீது நடவடிக்கை போன்றவற்றை கோரியும், உண்மை நிலையை பிரதமர் மோடி விளக்கவும் வலியுறுத்துகிறது. 3 மாதமாக கலவரம் நடக்கும் நிலையில், நிர்வாண வீடியோ வெளியான பிறகே, நாடாளுமன்றத்திற்கு வெளியே, பிரதமர் வாய் திறந்து குற்றவாளிகள் தப்ப முடியாது எனக் கூறியிருக்கிறார். ஆனால், நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்க பிரதமர் இன்னும் முன்வராமல் இருப்பது மக்கள் மீதுள்ள அக்கறையின்மையை காட்டுகிறது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி, அடுத்தகட்ட நகர்வுக்கு சென்றிருக்கிறது. எப்படியாவது மணிப்பூர் உண்மை நிலவரத்தை பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, ஒன்றிய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறது. மணிப்பூர் மக்கள் மீது ஆளும் அரசு கவனம் செலுத்தாத நிலையில், இந்தியா கூட்டணி எம்பிக்கள் குழு நேரடியாக களமிறங்கியிருக்கிறது.

அங்கு நடந்துள்ள கலவரம், பாதிப்பு, காரணமானவர்கள் குறித்து அறிய, கள ஆய்வுக்கு இந்தியா கூட்டணியின் சார்பில் 21 எம்பிக்கள் நேற்றைய தினம் மணிப்பூர் சென்றுள்ளனர். இவர்கள் மக்களிடம் விசாரித்து உண்மை நிலையை அறிந்து அறிவிக்க உள்ளனர். இப்பயணத்தில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது. திமுக சார்பில் கனிமொழி, விசிக சார்பில் திருமாவளவன், ரவிக்குமார் என 3 எம்பிக்கள் சென்றுள்ளனர். இதுதவிர காங்கிரஸ் எம்பிக்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய், திரிணாமுல் எம்பி சுஷ்மிதாதேவ் என அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இரண்டு குழுவாக பிரிந்து, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை அறிவதோடு, அவர்கள் அப்பிரச்னையில் இருந்து மீண்டு வர என்ன செய்ய வேண்டும் என்பதை கள ஆய்வு செய்கின்றனர். நாளைய தினம் டெல்லி திரும்பும் இக்குழு, ஒன்றிய அரசிடம் இருந்து எதிர்பார்ப்பது, மணிப்பூர் உண்மை நிலையை மக்களிடம் தெளிவுபடுத்துவதும், தீர்வு காணுவதையுமே. அதனால், நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போதாவது, மவுனம் கலைந்து பிரதமர் மோடி உண்மை நிலையை பேச வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The post மணிப்பூரில் எம்.பி.,க்கள் குழு appeared first on Dinakaran.

Tags : M. ,Manipur GP ,Maidthis ,Kuki ,Manipur ,Dinakaran ,
× RELATED பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மஜத...