×

கோயில் பகுதியில் 11 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: உயிருக்கு ஆபத்தான நிலையில் அட்மிட்

சத்னா: மத்திய பிரதேசத்தில் கோயில் பகுதியில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டம் மைஹார் காவல் நிலையத்திற்குட்பட்ட ஆர்கண்டி டவுன்ஷிப் பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன் மாயமானதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிந்து சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் சிறுமியின் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோயிலுக்கு அருகே ரத்த காயங்களுடன் அரை நிர்வாணமாக சிறுமி கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடல் முழுக்க ரத்த காயங்களால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி லோகேஷ் தபார் கூறுகையில், ‘மைஹார் நகரில் அமைந்துள்ள சாரதா தேவியின் கோயிலுக்கு அருகே காடு உள்ளது. இந்த காட்டுக்குள் இருந்து சிறுமி மீட்கப்பட்டார். அவரது உடல் முழுவதும் ரத்த காயங்கள் உள்ளன. சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அந்த சிறுமியை மர்ம நபர்கள் சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரில் ஒருவர் கோயில் பசுகாப்பகத்தில் பணியாற்றி வரும் தொழிலாளி ஆவார். மற்ற குற்றவாளிகளை தேடி வருகிறோம்’ என்றனர். கோயில் பகுதியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம், மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும் என்று தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கமல்நாத், ‘மாநில சகோதரிகள், மகள்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிவராஜ் சிங் சவுகான் அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது’ என்று குற்றம்சாட்டி உள்ளார்.

The post கோயில் பகுதியில் 11 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: உயிருக்கு ஆபத்தான நிலையில் அட்மிட் appeared first on Dinakaran.

Tags : Satna ,Madhya Pradesh ,
× RELATED மக்களவைத் தேர்தலில் தோல்வி குறித்து...