×

பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது திருப்பதியில் மொபைல் கன்டெய்னர் அறைகள் பயன்படுத்த திட்டம்

திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த நன்கொடையாளர் மூர்த்தி என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 2 மொபைல் கன்டெய்னர் அறைகள் வழங்கினார். இதில் ஒரு கன்டெய்னர் அறை, திருமலை போக்குவரத்து தேவஸ்தானத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள் ஓய்வெடுக்கவும், ரம்பாகீஜா ஓய்வறை 3க்கு எதிரே உள்ள அறையில் விஜிலென்ஸ் பணியாளர்கள் ஓய்வெடுக்கவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கன்டெய்னர் அறைகளை அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, செயல் அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டியுடன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். அப்போது சுப்பாரெட்டி பேசியதாவது: ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கான அறைகள் திருமலையில் குறைவாகவே உள்ளது.

ஆனால் புதிய ஓய்வறைகள் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்பதால் பல இடங்களில் உள்ள பழைய ஓய்வறைகள் மட்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள நேரத்தில் இதுபோன்ற ‘நடமாடும் மொபைல் கன்டெய்னர்’ அறைகள் திருமலையில் பல்வேறு இடங்களில் அமைத்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த அறைகள் பக்தர்கள் தங்கும் வகையில் படுக்கைகள், குளியலறைகள் மற்றும் கழிவறைகள் கொண்டதாக இருக்கும். நன்கொடையாளர் வழங்கிய கன்டெய்னர்களின் மதிப்பு சுமார் ரூ25 லட்சம். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.3.76 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 69,378 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28,371 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ3.76 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி கோயிலில் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 10 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

The post பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது திருப்பதியில் மொபைல் கன்டெய்னர் அறைகள் பயன்படுத்த திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruppati ,Tirumalai ,Andhra State ,Visakhapatinam ,Murthy ,Thirumalai Tirupati ,Devasthanam ,Tirupati ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் அமராவதி சட்டமன்ற...