×

பாஜ தேசிய பொது செயலாளர் பதவியில் இருந்து தமிழக பாஜ பொறுப்பாளர் சி.டி.ரவி அதிரடி நீக்கம்: அண்ணாமலையின் நடைபயணத்தில் பங்கேற்றுள்ள நிலையில் பதவி பறிப்பு

சென்னை: பாஜ தேசிய பொது செயலாளர் பதவியில் இருந்து, தமிழக பாஜ பொறுப்பாளர் சி.டி.ரவி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அண்ணாமலையின் நடைபயணத்தில் பங்கேற்றுள்ள நிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. பாஜ தேசிய பொது செயலாளராகவும், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமாக இருந்து வருபவர் சி.டி.ரவி. இவர் அண்மையில் நடைபெற்ற கர்நாடக தேர்தலில் சிக்கமகளூரு தொகுதியில் 5வது முறையாக களமிறங்கினார். அவரை எதிர்த்து 17 ஆண்டுகளாக அவரது நண்பராக இருந்த எச்.டி.தம்மையா, காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டார்.

இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.டி.தம்மையாவை விட 5,926 வாக்குகள் குறைவாக பெற்று சி.டி.ரவி தோல்வி அடைந்தார். சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. தற்போது சி.டி.ரவி அண்ணாமலையின் நடைபயணத்தில் கலந்து கொண்டுள்ளார். நடைபயணத்தில் இருக்கும் போதே அவரின் தேசிய பொது செயலாளர் பதவியை பறித்து கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக பாஜ தலைவர் ஜே.பி.நட்டா இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் தேசிய நிர்வாகிகள் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 13 துணை தலைவர்கள், 9 பொது செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தேசிய பொது செயலாளராக இருந்த சி.டி.ரவி, திலிப் சாஹியா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். காங்கிரசில் இருந்து பாஜவில் சேர்ந்த அனில் ஆண்டனிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அண்ணாமலையின் நடைபயணத்தில் இருந்த போதே பாஜ தேசிய பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் இந்த அதிரடி மாற்றத்தை பாஜ மேலிடம் பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் சி.டி.ரவி தமிழக பாஜ பொறுப்பாளர் பதவியில் தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

The post பாஜ தேசிய பொது செயலாளர் பதவியில் இருந்து தமிழக பாஜ பொறுப்பாளர் சி.டி.ரவி அதிரடி நீக்கம்: அண்ணாமலையின் நடைபயணத்தில் பங்கேற்றுள்ள நிலையில் பதவி பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Baja ,National Secretary General of ,Baja ,TD ,Anamalayas ,Chennai ,Chief Commissioner ,Tamil ,Nadu Baja ,C. ,Ravi ,Anamalai ,National General Secretary of State ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மக்கள் மீது மோடிக்கு...