×

ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை விவகாரம் அப்போலோ மருத்துவமனை வழக்கை திசை திருப்புகிறது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான விவகாரத்தில் அப்போலோ மருத்துவமனை வழக்கை திசை திருப்புகிறது,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டி உள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ‘ஜெயலலிதா மருத்துவ சிகிச்சையில் இருந்த போது சிசிடிவி கேமராக்கள் நீக்கப்பட்டது குறித்து சர்ச்சை கிளப்பப்பட்டது. தற்போது வரையில் அது நீடித்து வருகிறது. இதில், அப்போது இருந்த அதிமுக அரசு வலியுறுத்தியதால்தான் சிகிச்சை அறையில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது. மேலும், ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அனுமதிக்க அழைத்து வரும்போது மயக்க நிலையில் இருந்தது மட்டுமின்றி, அடிப்பட்ட காயங்களுடன்தான் இருந்தார்,’ என அப்பல்லோ மருத்துவனை தரப்பில் கூறப்பட்டது. இந்த வழக்கு 2வது நாளாக நேற்றும் நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் தனது வாதத்தில் கூறியதாவது:ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அனைத்தும் முடிந்த பின்பு, முதலில் அறிக்கையை சமர்ப்பிக்கும், அதுவும் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது முழுமையாக அரசால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதன் பிறகுதான் பொதுவெளியில் அது வெளியிடப்படும். ஆனால், அதற்கு முன்னதாகவே ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என அப்போலோ மருத்துவமனை வைக்கும் குற்றச்சாட்டை எப்படி ஏற்க முடியும்?மேலும், இது குறித்து மருத்துவமனை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் எந்த ஒரு விவரங்களும் இல்லை. அது சார்ந்த குறிப்புகளும் கிடையாது. இது போன்ற வாதங்களை தற்போது நீதிமன்றத்தில் வைப்பது வழக்கை திசை திருப்பும் செயலாகும். முதலில் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் என கேட்டார்கள். இப்போது, ஒருதலைபட்சமாக ஆணையம் செயல்படுகிறது என கூறுகிறார்கள். இந்த விவகாரத்தில் அப்போலோவின் அனைத்து தகவல்களும் முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது. குறிப்பாக, விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை எல்லாம் நடந்து வந்த ஒரு வருடத்திற்கு பிறகுதான், இவர்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் மருத்துவமனை தரப்பில் இருந்து 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக விசாரிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் வாதிட்டார்.* ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக இப்போதே எப்படி சொல்ல முடியும்?தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் தனது வாதத்தை முடித்த பிறகு குறுக்கிட்ட நீதிபதிகள், ‘ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அப்போலோ மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது இவ்வாறு எப்படி நீங்கள் கூற முடியும்? ஆணையம் தனது விசாரணையை நடத்தி முடித்து அறிக்கை சமர்ப்பித்த பிறகுதான், என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும். அப்போதுதான் நீங்கள் (அப்போலோ) ஒருதலைப்பட்சம் என்ற விவகாரத்தையே  கொண்டு வர முடியும். அதனால்,  மருத்துவமனை தரப்பில் இப்போது இப்படி கூறப்படுவது ஏற்கக் கூடியதாக இல்லை,’ என கூறி, வழக்கை ஒத்திவைத்தனர்….

The post ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை விவகாரம் அப்போலோ மருத்துவமனை வழக்கை திசை திருப்புகிறது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Arumukusamy Commission Investigation ,Apolo Hospital ,Tamil Nadu Government ,Supreme Court ,New Delhi ,Apollo Hospital ,Arumumusamy Commission ,Jayalalithah ,Arumakusamy Commission Investigation ,Dinakaran ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...