×

திமிரியில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்காவிட்டால் அபராதம் விதிக்க வேண்டும்

*அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

ஆற்காடு : ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு கலெக்டர் ச.வளர்மதி உத்தரவிட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஒன்றியம், வளையாத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ₹39.95 லட்சம் மதிப்பீட்டில் ஊரக செயலக கட்டிடம் கட்டும் பணி, வெற்றித்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ₹30.28 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டும் பணி, அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் ₹5.67 லட்சம் மதிப்பீட்டில் வெட்டப்பட்டுள்ள குளம், மழையூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ₹39.95 லட்சம் மதிப்பீட்டில் ஊரக செயலக கட்டிடம் கட்டும் பணி, புதூர் ஊராட்சியில் டி.புதூர் காலனியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ₹30.28 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டும் பணி, திமிரியில் ₹3.42 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை கலெக்டர் ச.வளர்மதி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பணிகள் தாமதம் குறித்து ஒப்பந்ததாரர்களிடம் முறையான தகவல்கள் இல்லை. ஒப்பந்த காலத்திற்குள் பணி முடிக்காததற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அதிக காலதாமதம் ஏற்படும் பணி ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு 2020-21, 2021-22, 2022-23 ஆகிய ஆண்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை முறையாக கண்காணித்து, விரைந்து மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் காலதாமதத்தை ஏற்று கொள்ளக்கூடாது. பள்ளி கட்டிடப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர் இந்த பணிகளை அடுத்த மாதத்திற்குள் முடிக்க முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென என கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

முன்னதாக, திமிரி ஒன்றியம், பெருமாந்தாங்கல் ஊராட்சியில் சமத்துவபுரம் அமைப்பதற்கான இடம் ஒதுக்கிட சுமார் 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட வேண்டியதற்கான இடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின்போது திமிரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஜே.ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய, சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், பொறியாளர்கள் சரவணன், தியாகராஜன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post திமிரியில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்காவிட்டால் அபராதம் விதிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Timiri ,Arkadu ,
× RELATED ஆற்காடு செல்லும் சாலை இரும்பேடு...