×

கனமழையில் சிக்கிய பழங்குடியினர் 100 பேரை காப்பாற்ற ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி மேற்கொள்ள வேண்டும்

*மத்திய, மாநில அரசுகளுக்கு எம்எல்ஏ வேண்டுகோள்

திருமலை : தெலங்கானாவில் கனமழையில் சிக்கிய பழங்குடியினர் 100 பேரை காப்பாற்ற ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி மேற்கொள்ள வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு எம்எல்ஏ சீத்தக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் கனமழை காரணமாக முலுகு மாவட்டத்தில் உள்ள மலைவாழ் பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் குளங்கள் நிரம்பி வழிகின்றன.

கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஓடைகள், காட்டாற்று வெள்ளமாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையால் அந்தந்த கிராமங்களில் உள்ள குளங்கள், மதகுகள் உடைந்து வெள்ளநீர் கிராமங்களுக்குள் புகுந்து உள்ளது. ஏதூர் நகரம் கொண்டை கிராமத்தில் வெள்ளத்தில் 100 பேர் சிக்கி கொண்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் 6 பேர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொகுதி எம்எல்ஏ சீத்தக்கா நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, எம்எல்ஏ சீத்தக்கா கூறுகையில், ‘மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் 100க்கும் மேற்பட்டோரை மீட்க மத்திய, மாநில அரசுகள் ஹெலிகாப்டர் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். கொண்டை கிராமம் தண்ணீரில் மூழ்கி உள்ளது. உதவிக்காகவும், காப்பாற்றவும் காத்திருக்கிறோம். மீட்பு குழுவினரால் வெள்ளத்தை தாண்டி சென்று உதவ முடியவில்லை.

எல்லா கிராமங்களையும் சுற்றி ஓடைகள், குளங்கள் உள்ளன. தயவு செய்து ஹெலிகாப்டர் மூலம் மக்களை வெளியேற்றுங்கள். என்று உணர்ச்சி வசப்பட்ட எம்எல்ஏ சீத்தக்கா கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திராவிற்கு ₹12 கோடி நிதி ஒதுக்கீடு

தெலங்கானா, ஆந்திராவில் பெய்து வரும் மழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அவசர நிவாரண பணிகளுக்காக ₹12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில், அவசரகால நிவாரண மையங்கள் அமைக்கவும், வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி உணவு, தண்ணீர், பால், சுகாதார முகாம், ஆகியவற்றுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

இதில், அல்லூரி சீதாராமராஜூ ₹3 கோடி, கிழக்கு கோதாவரி ₹1 கோடி, கோணசீமா ₹3 கோடி, ஏலூர் ₹3 கோடி, மேற்கு கோதாவரி ₹2 கோடி என்று மொத்தம் 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆந்திர மாநில வருவாய் (பேரிடர் மேலாண்மை) சிறப்பு தலைமை செயலாளர் சாய்பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

The post கனமழையில் சிக்கிய பழங்குடியினர் 100 பேரை காப்பாற்ற ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி மேற்கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Aborigines ,MLA ,Thirumala ,Telangana ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...