×

கிருஷ்ணகிரியை உலுக்கிய சோக சம்பவம்!: பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு 8ஆக உயர்வு..ஹோட்டலில் சிலிண்டர் வெடித்ததே விபத்துக்கு காரணம்..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழப்பு 8ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகர் கோவில் செல்லும் வழியில் பழைய பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் பட்டாசு குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் பல தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 3 வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில் இடிபாடுகளில் மேலும் 5 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா? என தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் கிருஷ்ணகிரி ஆட்சியர் சரயு, காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர். வெடி விபத்து நடந்த இடத்தை எம்எல்ஏக்கள் மதியழகன், அசோக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முறையான பாதுகாப்பு இன்றி பட்டாசு குடோன் அமைக்கப்பட்டதால், பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்து இந்த விபத்து நடந்ததா? அல்லது மின்கசிவு காரணமாக இந்த பட்டாசு குடோன் வெடித்து சிதறியதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இடிபாட்டு கட்டடங்களை முழுவதுமாக அகற்றிய பின் பலி எண்ணிக்கை பற்றிய முழுமையான விவரம் தெரியவரும்.

பட்டாசு குடோன் விபத்தில் உரிமையாளர் குடும்பம் பலி:

பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி, மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரித்திகா, மகன் ரித்திஷ் ஆகியோர் உயிரிழந்தனர். பட்டாசு குடோன் அருகில் இருந்த ஹோட்டல் கடை உரிமையாளர் ராஜேஸ்வரி, இப்ராஹிம், இம்ரான் உள்பட 8 பேர் பலியாகினர். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த இப்ராஹிம், இம்ரான் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள். ஹோட்டலில் வெடித்துச் சிதறிய சிலிண்டர், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீதும் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்த 8-வது நபர் யார் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஹோட்டலில் சிலிண்டர் வெடித்ததே விபத்துக்கு காரணம்:

கிருஷ்ணகிரியில் 8 பேர் பலியாகக் காரணமான பட்டாசு குடோன் விபத்து குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு குடோன் அருகில் செயல்பட்ட ஹோட்டலில் சிலிண்டர் வெடித்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஹோட்டல் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் அருகில் இருந்த பட்டாசு குடோனில் தீப்பற்றியது.

The post கிருஷ்ணகிரியை உலுக்கிய சோக சம்பவம்!: பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு 8ஆக உயர்வு..ஹோட்டலில் சிலிண்டர் வெடித்ததே விபத்துக்கு காரணம்..!! appeared first on Dinakaran.

Tags : Sadic ,Krishnagiri ,Fireworks crash ,Gudon ,Kudon ,Dinakaran ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்