சேலம், ஜூலை 29: சேலம் மாநகரத்தில் பல பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், கெட்டுப்போன ஆட்டிறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.
சேலம் கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுருளி, ஆரோக்கியபிரபு, ரவி, சிவலிங்கம், புஷ்பராஜ், குமரகுருபரன், ரமேஷ், முத்துசாமி, கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர், மாநகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, குரங்குச்சாவடி, ஜங்ஷன், வ.உ.சி மார்க்கெட், சின்னக்கடைவீதி போன்ற பகுதிகள் 54 கடைகள் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 5.800 கிலோ, சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்பட்ட மீன் 50 கிலோ, பழைய கெட்டுப்போன ஆட்டிறைச்சி 17 கிலோ ஆகியவற்றை பறிமுதல் செய்து அங்கேயே கொட்டி அழிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட உணவு பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ₹34 ஆயிரமாகும். மேலும் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்திய 8 உணவு வணிக நிறுவனங்களுக்கு, தலா ₹2 ஆயிரம் வீதம் ₹16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் இறைச்சி பயன்படுத்திய 3 உணவு வணிக நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இறைச்சியை மாட்டுவதற்கு துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகள் பயன்படுத்த வேண்டும். இறைச்சிகளை வெளியில் தூசு படியும்படி தொங்க விடக்கூடாது. கடைகளில் உற்பத்தியாகும் கழிவுகளை சுகாதாரமான முறையில் கையாள வேண்டும் என்றும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
The post சேலத்தில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் appeared first on Dinakaran.
