×

அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர் மன்ற தேர்தல்

 

தர்மபுரி, ஜூலை 29: தர்மபுரி அருகே உம்மியம்பட்டி அரசு நடுநிலை பள்ளியில், தேர்தல் ஆணைய விதிமுறைப்படி மாணவர் மன்ற தேர்தல் நடந்தது. தொப்பூர் அருகே உம்மியம்பட்டி அரசு நடுநிலை பள்ளியில் 340க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் நரசிம்மன் உள்ளிட்ட 10 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர் மன்ற தேர்தல் நடத்தி, தலைவர், துணை தலைவர் மற்றும் 14 துறை அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பள்ளி பணிகள் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு மாணவர் மன்ற தேர்தல், கடந்த சில நாட்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கலோடு தொடங்கியது. இதில் 18 மாணவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆனால் 3 மாணவர்களின் மனுக்களில், சிறு தவறு ஏற்பட்டதால், அவை நிராகரிக்கப்பட்டது. மேலும் ஒருவர் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றுள்ளார். நேற்று காலை, மாணவர் மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களை தேர்ந்தெடுக்க பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குச்சாவடி அலுவலர்கள், முகவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 14 வேட்பாளர்களுக்கான சின்னங்களை ஒதுக்கி, 266 மாணவ, மாணவிகள் வாக்களித்தனர். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு, தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களோடு 14 துறை அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். இந்த 14 துறை அமைச்சர்களுக்கு தனித்தனியாக துறைகள் ஒதுக்கி, பள்ளி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் நரசிம்மன் கூறுகையில், ‘மக்கள் பிரதிநிதிகளின் பணிகள் என்னென்ன என்பதை, மாணவர்களுக்கு பள்ளிப்பருவத்திலே தெரியப்படுத்துவதற்காக, தேர்தல் விதிமுறைகளின்படி இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலில் வாக்களித்த மாணவ, மாணவிகள், நல் வாக்குறுதி கொடுத்தவர்களுக்கு வாக்களித்துள்ளனர். தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை ரகசியமாகவே வைத்துள்ளனர். தேர்தல் அலுவலராக தலைமையாசிரியரும், வாக்குசாவடி அலுவலர்களாக ஆசிரிய, ஆசிரியைகள் செயல்பட்டனர்,’ என்றார்.

The post அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர் மன்ற தேர்தல் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Ummiyampatti ,Government Middle School ,Student Council ,Election Commission ,Council Election ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது