×

அரசு விளம்பரங்களில் இடம் பிடித்த நாகர்கோவில் வேலம்மாள் பாட்டி காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி கலுங்கடியை சேர்ந்தவர் வேலம்மாள் பாட்டி. இவருக்கு வயது 92. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கொரோனா கால நிவாரணமான ரூ.2 ஆயிரத்தை பெற்ற மகிழ்ச்சியில், தனது பொக்கை வாய் சிரிப்பை வேலம்மாள் பாட்டி வெளிப்படுத்தியிருந்தார். அவரின் அழகான புன்னகையுடன் வெளியாகி இருந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலானது. அந்த புகைப்படம் அரசு விளம்பரங்களிலும் இடம் பெற்றது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகர்கோவில் வந்திருந்த போது வேலம்மாள் பாட்டி அவரை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவரின் கோரிக்கையை ஏற்று, அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக வேலம்மாள் பாட்டி நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு நேற்று காலை மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘வேலம்மாள் பாட்டி மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். கொரோனா பேரிடர் கால நிவாரணமாக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்ற போது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறி உள்ளார்.

The post அரசு விளம்பரங்களில் இடம் பிடித்த நாகர்கோவில் வேலம்மாள் பாட்டி காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Velammaal ,Nagargo ,Chief Minister ,B.C. G.K. ,Stalin ,Vadasseri Kalungadi ,Tamil Nadu ,G.K. Corona ,Velammal ,B.C. G.K. Stalin ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில்...