×

3 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.11.28 கோடி மதிப்பீட்டிலான நிலங்கள் மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை

சென்னை: 3 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.11.28 கோடி மதிப்பீட்டிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இன்று (28.07.2023) நாகப்பட்டினம், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 3 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.11.28 கோடி மதிப்பீட்டிலான நிலங்கள் மீட்கப்பட்டு திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், சித்தாய்மூர், அருள்மிகு சுவர்ணதாபனேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமாக திருத்துறைப்பூண்டி வட்டம், தில்லைவிளாகம் கிராமத்தில் 23.88 ஏக்கர் புன்செய் நிலம் மற்றும் 2.33 ஏக்கர் நன்செய் நிலம் உள்ளன. புன்செய் நிலத்தில் 16 தனிநபர்கள் வீடுகள் கட்டியும், நன்செய் நிலத்தினை தனிநபர் ஒருவரும் ஆக்கிரமித்திருந்தனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மண்டல இணை ஆணையர் திரு.வி.குமரேசன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட உதவி ஆணையர் திருமதி ப. ராணி ஆகியோர் முன்னிலையில் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் இன்று திருக்கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு “HRCE“ என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக் கற்கள் நட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

அதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.8.28 கோடியாகும். மேலும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம், அருள்மிகு காடு அனுமந்தராயர் சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 10.98 ஏக்கர் நிலம் மற்றும் அதன் உபக்கோயிலான கோனாபுரம், அருள்மிகு லட்சுமி நாராயணசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 2.14 ஏக்கர் நிலம் தனிநபர் பெயரில் பட்டா பெற்றிருப்பதை அறிந்து திருப்பூர் மாவட்ட வருவாய் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் திருக்கோயில்களுக்கு சாதகமாக பட்டா மாற்றம் செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் இன்று திருப்பூர் மண்டல இணை ஆணையரின் அறிவுரையின்படி, திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் திருமதி ஜெயதேவி அவர்கள் முன்னிலையில்,

காவல்துறை மற்றும் வருவாய்துறை உதவியோடு திருக்கோயில்களின் நிலம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு ரூ. 3 கோடி ஆகும். ஆகமொத்தம் இன்றைய தினம் மீட்கப்பட்ட 3 திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தின் மதிப்பு ரூ.11.28 கோடியாகும். இந்நிகழ்வுகளின்போது தனி வட்டாட்சியர்கள் (ஆலய நிலங்கள்) பி.எம்.அமுதா, சு.மகேஸ்வரன், திருக்கோயில் செயல் அலுவலர்கள் மா.தனலட்சுமி, தி.மல்லிகா, சிறப்பு பணி அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post 3 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.11.28 கோடி மதிப்பீட்டிலான நிலங்கள் மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Religious ,Chennai ,Hindu Religious Foundation ,Chief Minister ,Dinakaran ,
× RELATED இந்து சமய அறநிலையத் துறை...