×

தி கிரேட் பாம்பே சர்க்கஸ் ஆகஸ்ட் 6ம் தேதியுடன் நிறைவு பொதுமக்களை மகிழ்விக்க ரிஸ்க் எடுக்கும் கலைஞர்கள்

*‘‘உயிர் பயம் மக்களின் சிரிப்பினில் மறைந்து போகும்’’ என நெகிழ்ச்சி

கோவை : உலகமெங்கும் பல லட்சக்கணக்கான மக்களால் கண்டு மகிழப்படும் புகழ் பெற்ற ‘தி கிரேட் பாம்பே சர்க்கஸ்’ 7 ஆண்டுகளுக்கு பிறகு கோவை மக்களை மகிழ்விக்க மீண்டும் கடந்த ஜூன் 23ம் தேதி கோவைக்கு வந்தது. கோவை அவினாசி சாலையில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் வியக்கவைக்கும் புது சாகசங்களுடன், புது குழுவுடன், புத்துணர்ச்சியுடன் சர்க்கஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தினமும் மதியம் 1 மணி, 4 மணி மற்றும் மாலை 7 மணி என மூன்று காட்சிகள் என நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு காட்சியும் 2 மணி நேரம் 20 நிமிடம் இருக்கும். அவற்றில் 30க்கும் அதிகமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும் 15க்கும் அதிகமான புதிய சாகசங்கள் நிகழ்வில் சேர்க்கப்பட்டுள்ளன. உலக சர்க்கஸ் போட்டிகளில் பங்கு பெற்று வெண்கல பதக்கம் பெற்ற எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். மணிப்பூரிலிருந்து எட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவும், இந்தியா மற்றும் நேபாளத்தில் இருந்து புகழ்பெற்ற கலைஞர்களும் இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் பலவிதமான சாகசங்களை செய்து காண்போரை ஆச்சரியத்துக்குள்ளாக்கி வருகின்றனர்.

பார்வையாளர்களின் சௌகரியத்திற்காக சாகசம் நடைபெறும் கூடாரம் குளிரூட்டப்பட்டுள்ளது. இந்த கூடாரம் நெருப்பு மற்றும் மழையை எதிர்க்கக்கூடியது. டிக்கெட்டுகளின் விலை ரூ.100 முதல் ரூ.400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.100, 200, 300 ஆகிய டிக்கெட்டுகள் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே பெற்றுக் கொள்ளலாம். வ.உ.சி. மைதானத்தில் 889360 6308. 87788 38082, 87142 85256 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு ரூ.400 டிக்கெட்டுகளுக்காக முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த சர்க்கஸ் நிகழ்ச்சி ஆகஸ்ட் 6ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

மக்களை மகிழ்விக்க தி கிரேட் பாம்பே சர்க்கஸ் கலைஞர்கள் ரிஸ்க் எடுத்து பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர். இது குறித்து டபுள் ஏரியல் ஆர்ட் என்னும் நிகழ்ச்சியில் சாகசத்தில் ஈடுபடும் அஜித், அனு தம்பதியினர் கூறுகையில், ‘‘நாங்கள் நேபாள் நாட்டை சேர்ந்தவர்கள். இரண்டு துணிகளில் கால்களை கோர்த்தவாறு எனது கணவர் (அஜித்) அந்தரத்தில் தொங்கி என்னை (அனு) கைகளால் பிடித்து கொள்வார். பின்னர் அந்தரத்தில் தொங்கியவாறு சாகசத்தில் ஈடுபடுவோம். கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் என்றாலும் மக்களை மகிழ்விக்க ரிஸ்க் எடுக்கிறோம். மக்களின் ஆனந்த சிரிப்பினில், கை தட்டல்களால் உயிர் பயம் மறைந்து போகிறது. சர்க்கஸ் ஒன்றே எங்கள் வாழ்க்கை,’’ என்றனர்.

மக்களை சிரிக்க வைக்கும் சர்க்கஸ் ஜோக்கர்ஸ் ஏழுமலை, துளசிதாஸ் சவுத்திரி, மோகமது ஷாகித் ஆகியோர் கூறுகையில், ‘‘எங்களது ஜோக்கர்ஸ் டீம் மக்களை சிரிக்க வைக்க சர்க்கஸ் ஜோக்ஸ் மற்றும் திரைப்படங்களின் காமெடிகள் போன்றவற்றை மேற்கொள்ளுவோம். நடிகர் வடிவேலு சார்தான் எங்களது இன்ஸ்பிரேஷன். அவரை ரொம்ப பிடிக்கும். அவர் மற்றும் பல காமெடி நடிகர்களின் காட்சிகளை அதிகம் பார்ப்போம்.

அதேபோல் நடித்து மக்களை சிரிக்க வைப்போம். எங்களது வாழ்வில் பல சோகம் உள்ளது. அதை உள்ளுக்குள்ளேயே வைத்துவிட்டு சர்க்கஸ் நிகழ்ச்சி தொடங்கியதும் சிரிக்க வைக்கும் பணிகளை தொடங்கி விடுவோம். குழந்தைகளை கவர, அவர்களை மகிழ்விக்க முன்னுரிமை அளிப்போம். குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும்போது எங்களுக்கு ஆனந்தமாக இருக்கும்’’ என்றனர்.

கோவை மக்களின் ஆதரவு மிகவும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது என காதல் திருமணம் செய்துகொண்ட சர்க்கஸ் தம்பதி டையமண்ட், பிரியங்கா தெரிவித்தனர். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் டையமண்ட், காஷ்மீரை சேர்ந்தவர் பிரியங்கா. இவர்கள் சுமார் 20 வருடங்களாக சர்க்கஸில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு தங்களது சர்க்கஸ் சாகச நிகழ்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

டையமண்ட் வெயிட் லிப்டிங் மற்றும் பற்களால் கடித்து 72 கிலோ எடையை அசால்டாக தூக்கி சாகசம் செய்கிறார். பிரியங்கா சைக்கிளிங், ரிங் டான்ஸ் போன்றவற்றை மேற்கொள்கிறார். இது குறித்து காதல் தம்பதி கூறுகையில், ‘‘எங்களது நிகழ்ச்சிகளை கோவை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கின்றனர். கோவை மக்களின் ஆதரவு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது,’’ என்றார்.

தி கிரேட் பாம்பே சர்க்கஸ் மேலாளர் ஜெய பிரகாசன் கூறுகையில், ‘‘104 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது தி கிரேட் பாம்பே சர்க்கஸ். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளோம். தமிழகத்தில் சென்னை, கோவையில் நிகழ்ச்சிகளை நடத்த மிகவும் விரும்புவோம். எங்களது சர்க்கஸில் 120க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். சர்க்கஸ் என்பது ஒரு லைவ் ரியாலிட்டி நிகழ்ச்சி.

இதில் ரிஸ்க் எடுத்து கலைஞர்கள் தங்களது திறமைகளை நிரூபிக்கின்றனர். கோவையில் தற்போது வரை சுமார் 5 லட்சம் பேர் எங்களது சர்க்கஸ் நிகழ்ச்சியை கண்டுகளித்துள்ளனர். ஆகஸ்ட் 6ம் தேதியுடன் நிறைவடைகிறது,’’ என்றார்.

The post தி கிரேட் பாம்பே சர்க்கஸ் ஆகஸ்ட் 6ம் தேதியுடன் நிறைவு பொதுமக்களை மகிழ்விக்க ரிஸ்க் எடுக்கும் கலைஞர்கள் appeared first on Dinakaran.

Tags : Great Pompey Circus ,The Great Bombay Circus ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன்...