×

வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை 250 ஏக்கர் குறுவை சாகுபடி நெற்பயிர் கருகியது

*காரணம் தெரியாமல் விவசாயிகள் வேதனை

தா.பழூர் : அரியலூர் அடுத்த தா.பழூர் அருகே குறுவை சாகுபடி செய்த 250 ஏக்கர் நெற்பயிர் கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான், அனைக்குடி அருள்மொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோட்டார் பாசனம் மூலம் விவசாயிகள் குறுவை பட்டம் சாகுபடி மேற்கொண்டனர்.

நெல் நடவு 45 நாட்கள் ஆன நிலையில், பயிர்களின் தோகை காய்ந்து வந்தது. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் மருந்து கடைகளின் ஆலோசனை பெயரில் பல்வேறு மருந்துகளை பயன்படுத்தியும் பயிர் கருதுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது, முழு தோகையும் கருகிப்போய் உள்ளது.இந்நிலையில் பயிர்கள் தற்போது முற்றிலும் கருகிய நிலையில் உள்ளது. இந்த குறுவை பட்டம் சாகுபடியில் என்ன காரணம் என்று தெரியாத நிலையில் சுமார் 250 ஏக்கர் குறுவை சாகுபடி பயிர் கருகியதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஸ்ரீ புரந்தான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கூறுகையில், நவரை பட்டம் தாமதம் ஆனதால் குறுவை சாகுபடி செய்தோம். நகையை அடமானம் வைத்து சாகுபடி செய்த நிலையில் 1 ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவு செய்து சாகுபடி செய்த பயிர்கள் கருகி உள்ளது. இது தொடர்ந்தால் விவசாயத்தின் மீது ஆர்வம் இல்லாமல் போய்விடும். வெளி நாட்டில் வேலை பார்த்து வந்தேன். வெளிநாடுகளில் விவசாயம் செய்ய ஊக்குவிக்கின்றனர். மனைவி மக்களை நேசிக்காமல் செய்யும் தொழிலை நேசித்து செய்து வருகிறேன்.

காலை 6 மணி முதல் மாலை 6,7 மணிவரை வயலில் இருந்து பயிர்களை பாதுகாத்து வந்த நிலையில், இதுபோன்று பயிர்கள் கருகி உள்ளது மனதிற்கு வேதனை அளிக்கிறது. ஆகையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாய நிலங்களையும் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை 250 ஏக்கர் குறுவை சாகுபடி நெற்பயிர் கருகியது appeared first on Dinakaran.

Tags : Agriculture Department ,PALAYOR ,Ariyalur ,Kudi ,Palur ,Dinakaran ,
× RELATED மண் பரிசோதனைக்கு மாதிரி எடுக்கணுமா? வேளாண் துறையினர் விளக்கம்