×

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மர்மமான முறையில் ஆண் புலி இறந்தது தொடர்பாக 7 பேர் கைது..!!

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆண் புலி இறந்தது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். சுஜ்ஜில்குட்டை வனப்பகுதியில் கடந்த 25ம் தேதி 6 வயது ஆண் புலி மர்மமான முறையில் உயிரிழந்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன. இங்கு சுமார் 25க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பு விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வனப்பகுதியில் நாள்தோறும் வனத்துறை அதிகாரிகள் ரோந்து சென்று, வன விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்து வரும் நிலையில், வழக்கம்போல் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகம், கொத்தமங்கலம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றுள்ளனர்.

அப்போது ஒரு வறண்ட நீரோடையில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள், அப்பகுதியில் வனவிலங்குகள் ஏதாவது இறந்து கிடக்கிறதா? என்ற அடிப்படையில் சென்று பார்த்துள்ளனர். அங்கு உடல் அழுகிய நிலையில் புலி ஒன்று இறந்து கிடப்பதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதையடுத்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் ராஜ்குமார் உத்தரவின் பேரில், துணை இயக்குநர் வெங்கடேஷ் முன்னிலையில் வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் இறந்த புலியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்துள்ளார்.

இந்நிலையில், பவானிசாகர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சுஜ்ஜில்குட்டை வனப்பகுதியில் புலி உயிரிழந்தது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த சுருக்கு கம்பி வலையில் சிக்கி 6 வயது ஆண் புலி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. பவானிசாகர் அணை வனப்பகுதிகளில் இந்த கும்பல் வழக்கமாக மான் வேட்டையாடி கொல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

The post சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மர்மமான முறையில் ஆண் புலி இறந்தது தொடர்பாக 7 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Satyamangalam ,Tigers Archive ,Erode ,forest ,Sujilkuta Forest ,Satyamangalam Tigers Archive ,
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது