×

வியாசர்பாடி, துரைப்பாக்கத்தில் தீ விபத்து விழிப்புணர்வு

பெரம்பூர்: வியாசர்பாடி தொழிற்பேட்டையில் தொழிலாளர்களுக்கு தீ விபத்து தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தீயணைப்புத் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வியாசர்பாடி தீயணைப்புத் துறை சார்பில் நேற்று முன்தினம் வியாசர்பாடி தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது என்பது குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வியாசர்பாடி தொழிற்பேட்டையில் சுமார் 150க்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் அவ்வப்போது தீ விபத்துகளும் ஏற்படுவது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு தொழிலாளர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் வட மாநில பணியாளர்களின் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் முருகன், நிலைய அலுவலர் எட்வின் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

துரைப்பாக்கம் தீயணைப்பு துறை சார்பில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நேற்று துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. தீ விபத்து சமயத்தில் எவ்வாறு தீயை அணைப்பது மற்றும் தீ விபத்துகளில் எவ்வாறு செயல்பட்டு உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்றுவது என செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு மீட்பு குறித்து துரைப்பாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார், தீயணைப்பு வீரர்கள் ராமலிங்கம், கே.பிரவீன் குமார், கருத்தப்பாண்டி, விக்னேஷ் குமார், பி.பிரவின்குமார் ஆகியோர் செய்முறை விளக்கம் அளித்தனர்.

The post வியாசர்பாடி, துரைப்பாக்கத்தில் தீ விபத்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Vyasarpadi ,Duraipak ,Perambur ,
× RELATED போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பருக்கு சரமாரி கத்திக்குத்து: வாலிபர் கைது