×

சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக பிஎப்ஐ முன்னாள் மாநில தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: வங்கி பாஸ்புக் உள்பட முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்த விவகாரம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களுக்கு நிதி உதவி அளித்ததாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான 15 மாநிலங்களில் 93 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு ெசப்டம்பர் மாதம் சோதனை நடத்தினர். இந்நிலையில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் தனது விசாரணையை தற்போது தொடங்கி உள்ளது.

அந்த வகையில், சென்னை புரசைவாக்கத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் தலைவர் முகமது இஸ்மாயில் என்பவரின் வீடு மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர். குறிப்பாக, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள துரப் வீடு, புரசைவாக்கம் தாக்கர் தெருவில் உள்ள முன்னாள் மாநில தலைவர் முகமது இஸ்மாயில் வீடு, வேப்பேரி ஜோதி வெங்கடாசலம் தெருவில் உள்ள இஸ்மாயில் அக்சர் என்பவர் வீடுகள் என சென்னையில் 3 இடங்களில் தற்போது சோதனை நடந்தது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முன்னாள் மாநில தலைவர் முகமது இஸ்மாயில் மற்றும் வேப்பேரி ஜோதி வெங்கடாசலம் தெருவில் உள்ள இஸ்மாயில் அக்சர் வீடுகளில் நேற்று பிற்பகல் சோதனை முடிவடைந்தது. இந்த சோதனை முடிவில் முன்னாள் மாநில தலைவர் முகமது இஸ்மாயில் மட்டும் விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்களது அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள துரப் என்பவரின் வீட்டில் மட்டும் நேற்று இரவு வரை சோதனை நீடித்தது. இந்த சோதனையின் போது, வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக பிஎப்ஐ முன்னாள் மாநில தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: வங்கி பாஸ்புக் உள்பட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,PFI ,Chennai ,Union government ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் இன்று விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு