×

கந்தக்கோட்டம், அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் சார்பில் மருத்துவ மையம் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்


சென்னை: கந்தக்கோட்டம், அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் சார்பில் மருத்துவ மையம் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (27.07.2023) சென்னை, பாரிமுனை, தம்புசெட்டித் தெரு, திருமதி சாமுண்டீஸ்வரி அம்மாள் அறக்கட்டளை கட்டிடத்தில் கந்தக்கோட்டம், அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் சார்பில் மருத்துவ மையம் அமைக்கப்படவுள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, சென்னை, கீழ்ப்பாக்கம், அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பள்ளி நுழைவு வளைவிற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது, முதலமைச்சர் அவர்கள் தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற திராவிட மாடல் அரசு, 2021 – 2022ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் மலைக் கோயில்கள் மற்றும் பக்தர்கள் அதிகமாக வருகை தருகின்ற திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்கிடும் வகையில் 10 மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அந்த ஆண்டிலேயே 10 மருத்துவ மையங்களும் செயல்பாட்டிற்கு வந்தன. அதனை தொடர்ந்து 2022 – 2023 ஆம் ஆண்டில் 5 மருத்துவ மையங்கள் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டன. இதுவரையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோயில்களில் 15 மருத்துவ மையங்கள் அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன.

2023 -2024 ஆம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் புதிதாக 2 மருத்துவ மையங்களை அறிவித்திருக்கின்றோம். ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், சென்னை, தம்புச்செட்டித் தெருவில் திருமதி சாமுண்டீஸ்வரி அம்மாள் அறக்கட்டளையால் வழங்கப்பட்ட இடத்தில் கந்தக்கோட்டம், அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயில் சார்பில் மருத்துவ மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இன்று ஆய்வு செய்யப்பட்டிருக்கின்ற சுமார் 2,652 சதுரடி பரப்பளவு கொண்ட இடமானது திருமதி சாமுண்டீஸ்வரி அம்மாள் அவர்களால் மருத்துவமனை அமைப்பதற்காக உயில் எழுதி வைக்கப்பட்டு திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டு இங்கு மருத்துவமனையை முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள் திறந்து வைத்துள்ளார். இந்த இடத்தினை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து சுமார் 13-க்கும் மேற்பட்ட வணிக கடைகளாக பிரித்து மேல் வாடகைக்கு விட்டிருந்தார். சென்னை மண்டல இணை ஆணையர் அவர்களால் சட்டப்பிரிவு 78 – இன் படி வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு ஆக்கிரமிப்புதாரர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, சாமுண்டீஸ்வரி அம்மாள் உயிலாக எழுதி வைத்த இடத்தில் மீண்டும் மருத்துவமனை அமைத்திட உள்ளோம் என தெரிவித்தவுடன், எதிர் தரப்பினரின் மனுக்களை தள்ளுபடி செய்து இந்து சமய அறநிலையத்துறை வசமே இடத்தை ஒப்படைக்க உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான இந்த இடத்தில் காளிகாம்பாள் திருக்கோயில் மற்றும் கந்தக்கோட்டம் திருக்கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைத்திடும் வகையில் மருத்துவ மையம் விரைவில் அமைக்கப்படும்.

இந்த ஆட்சி பொறுப்பேற்றபின், இதுவரை ரூ.4,874 கோடி மதிப்பீட்டிலான 5,273 ஏக்கர் நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய தினம் சென்னை கீழ்ப்பாக்கம், அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பள்ளி நுழைவு வளைவிற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை பொறுத்தளவில் உட்கட்டமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன. இப்பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வந்தபின் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பருவமழை காலங்களில் தண்ணீர் வடியும் வகையிலான மழை நீர் வடிகால்கள், அதிகளவு கூட்டம் சேருகின்ற நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கும் காவல்துறை அலுவலகங்கள், மாற்றுப் பாதைகளாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்ற அயனஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும், சி.வே.கே.சாலை முதல் ஊரப்பாக்கம் – நல்லம்பாக்கம் வரையிலும், ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரையிலும் சாலை அமைக்கும் பணிகள், வனத்துறையிடம் அனுமதி பெறுதல் போன்ற பணிகளை அமைத்திட கடந்த ஆட்சி காலத்தில் முறையாக திட்டமிடாததால் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்ட பிறகு மக்களுக்கு எந்த வகையிலும் அசெளகரிகங்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

அண்ணாமலை அவர்கள் கூறியிருக்கின்ற புகார்கள் எவை எவை என்று தெரிந்த பிறகு அதற்கு முழுவதுமாக பதில் சொல்ல திராவிட முன்னேற்ற கழகம் தயாராக இருக்கின்றது. எங்களுக்கு மடியிலே கனமில்லை அதனால் வழியிலே பயமில்லை. பார்ட் 2 அல்ல, பார்ட் 10 வரைக்கும் போனாலும் கூட வருத்தப்படுவதற்கோ கவலைப்படுவதற்கோ ஒன்றும் இல்லை. டிரங்க் பெட்டியில் என்ன இருந்தது என்பதை அதை கொடுத்தவரிடமும், பெற்றுக் கொண்டவரிடம் தான் கேட்க வேண்டும். அண்ணாமலை அவர்கள் உடலை சீராக வைத்துக் கொள்வதற்காகவோ, மருத்துவர்களின் ஆலோசனைபடியோ நடை பயணத்தை மேற்கொள்கிறாரோ? தெரியவில்லை. ஆனால் நடை பயணம் மட்டுமல்ல எத்தனை குட்டிக்கரணங்கள் அடித்தாலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முதலமைச்சர் அவர்கள் தலைமையில் அமையப் போகின்ற கூட்டணி தான் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் மீட்டெடுக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அவர் நடை பயணத்திற்கு வாழ்த்துகள் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளின் போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க,வீ.முரளீதரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா, அருள்மிகு ஏகாம்பரரேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் எம்.வி.எம்.வேல்மோகன், காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் இரா.வான்மதி, சென்னை மண்டல இணை ஆணையர் (பொறுப்பு) ஜ.முல்லை, உதவி ஆணையர்கள் எம்.பாஸ்கரன், பொ.இலட்சுமிகாந்த பாரதிதாசன், திருக்கோயில் செயல் அலுவலர்கள் இரா.விக்னேஷ், பி.முத்துலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கந்தக்கோட்டம், அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் சார்பில் மருத்துவ மையம் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Medical Center ,Kandakgotam ,Arulmigu Muthukukumarasamy ,Thirukkoil ,Minister ,B. K.K. Segarbabu ,Chennai ,Kandakotam ,Arulmigu Muthukumarasamy Thirukkoil ,P. K.K. segarbabu ,Kandakotta ,Tirukkoil Medical Center ,Thirukhoil ,
× RELATED புற்றுநோய்க்கு உள்நாட்டில்...