×

முதல் வெற்றியை முந்தித்தரும் நாமம்

அருட்சக்தி பெருக்கும் ஆன்மிகத் தொடர் 10

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

6. உத்யத்பானு ஸஹஸ்ராபா
(உத்யத்பானு ஸஹஸ்ராபா நமஹ)

நாம் சென்ற நாமத்தில் தேவகார்ய ஸமுத்யதா என்கிற நாமத்தை பார்த்தோம். தேவர்களுடைய காரியம் என்ன என்பதை இன்னொரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேவர்கள் காரியம் என்பது இந்த இடத்தில் இந்திரியங்கள், இந்த உடல், மனம், புத்தி போன்றவை எதற்காக படைக்கப்பட்டனவோ அதற்குரிய பரம பிரயோஜனத்தை நிகழ்த்த வேண்டும். அதாவது, இந்திரியங்களை வெளிவிடாது உள்ளுக்குள் வைத்திருந்து அந்தர்முக யாகம் நிகழ்த்தி ஆத்மாவை அறிதல் வேண்டும். இந்த யாகத்தை நிகழ்த்துபவளே லலிதாம்பிகைதான்.

இப்படி இந்த யாகம் சித்திக்கும்போது அதாவது புலன்கள் வெளிப்புறமாக ஓடாது, உள்ளுக்குள்ளே அமிழ்ந்து கிடக்கும்போது அந்த அம்பிகையான ஆத்ம சொரூபமானது சட்டென்று தன்னை காட்டிக் கொடுக்கின்றாள். என்னவொரு அற்புதமான நாமம் இது. உத்யத்பானு ஸஹஸ்ராபா…. இருள் சூழ்ந்த ஓரிடத்தில், இருளெனில் அந்தகார இருள். ஜென்ம ஜென்மமாக சூழ்ந்திருந்த இருளுக்கு மத்தியில் சட்டென்று ஆயிரக்கணக்கான கிரணங்களை உடைய சூரியன் உதிப்பதுபோல் அந்த ஆத்ம ஞானம் ஒரு ஜீவனுக்குள் தோன்றுகின்றது.

அதுவரை அவனிடமிருந்த அறியாமை, மாயை, துக்கம், பயம், சோகம், காமம், ஆசைகள் என்று சூழப்பட்ட அத்தனையும் கண நேரத்திற்கும் குறைவான நேரத்தில் காணாமல் போகின்றன. எத்தனை எத்தனை ஜென்மங்கள் எடுத்து அலுத்துப்போன ஜீவனுக்கு லலிதாம்பிகையின் இந்த முதல் தரிசனம் கிடைத்தவுடன் பேரானந்தமடைகின்றான். ஆஹா… இவ்வளவு அருகில் இருந்துமா நான் இத்தனை ஜென்மங்களாக அடையாமல் விட்டு வைத்திருந்தேன் என்று ஆனந்த வெள்ளத்தில் துடித்துப் போகின்றான்.

ஏதோவொரு பந்தம் என்கிற சிறையில் அடைப்பட்டிருந்தவனை தூக்கத்திலிருந்து எழுப்பி, நீ ஏன் இத்தனை பந்தமுற்றிருக்கிறாய். நீ பந்தமற்றவன். எந்தக் கைவிலங்குகளும் இனி உன்னைக் கட்டாது. அதனால், விழித்துக் கொள் என்று அம்பிகையின் தரிசனம் ஒரு ஜீவனுக்கு கிட்டுவதை உத்யத்பானு சஹஸ்ராபா…. என்று இந்த நாமம் சொல்கிறது.

வானில் கூட்டம் கூட்டமாக நட்சந்த்திரங்கள் ஒளிர்கின்றன. பிறகு மெல்ல மெல்ல அந்த நட்சத்திரங்களை மறையச்செய்வதுபோல விடியலில் கீழ்வானத்தில் ஒரு அருணோதயம் உதயமாகும்போது இந்த உலகமே ஒளிர்கின்றதல்லவா… அதுபோல அம்பிகை உதயமாகும் அந்த ஞானோதயத்தை என்னவென்று சொல்வது. அது மனம் தாண்டிய அனுபூதி நிலை. புத்திக்கு எட்டாத நிலை. எண்ணத்தால் தொடமுடியாத உயர்ந்த நிலை. அங்கு உண்மையில் அனுபவிப்பவர், அனுபவம், அனுபவிக்கப்படும் வஸ்து என்று எதுவும் இல்லை. அவளே யாதுமாகி நிறைகிறாள்.

இந்த வானிலுள்ள நட்சத்திரங்களை சிறுசிறு ஆசைகள் என்று கொள்வோமாயின் சூரியன் தகதகவென உதயமாகும்போது அந்த ஆசை என்கிற நட்சத்திரங்களும் மறைந்து போகின்றன. உத்யத் என்றால் உதயமாவது. பானு என்றால் சூரியன். ஸஹஸ்ர என்றால் ஆயிரக்கணக்கான என்று அர்த்தம். அதாவது ஆயிரக்கணக்கான கிரணங்கள் சட்டென்று பூமியை நோக்கி வரும்போது பூமி எப்படி ஒளிருமோ அதுபோல என்று பொருள்.

ஸஹஸ்ராபா எனும் வார்த்தையில் ஆபா… என்கிற பதம் அம்பாளுடைய காந்தி, சிவப்பு வர்ணத்தை குறிக்கின்றன. மேலும், கருணையைக் குறிக்கும் நிறமும் சிவப்பு நிறமாகும். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் இப்படிப்பட்ட தேவியின் தரிசனம் உனக்கு கிட்ட வேண்டுமென நினைத்து தனிமையில் அமர்ந்து அழமாட்டாயா… என்று கேட்கிறார். குருவடிவில் அம்பிகையே தோன்றி அவளே அந்த தேவகார்யமான அந்தர்முகமான வேள்வியை நிகழ்த்தி, உத்யத்பானு என்கிற ஞான சூரியனாக நம்முள்
ஒளிர்கிறாள்.

இதற்குப்பிறகு வாழ்வில் வேறெதுவும் இல்லை. இன்னொரு விஷயமாக யார் ஒருவருக்கு இந்த தரிசனம் கிட்டவில்லையோ அவர்கள் மீண்டும் மீண்டும் உலகியல் வாழ்வில் உழன்று கொண்டேயிருப்பார்கள்.

(சக்தி சுழலும்)

பிரச்னைகள் தீர்க்கும் லலிதா சகஸ்ரநாம பரிகாரம்

முதல் வெற்றியை தரும் அம்பிகையின் திருநாமம் இதுஎந்தத் துறையாக இருந்தாலும் சரிதான்… வெகுநாட்களாக முயற்சித்து முயற்சித்து வெற்றிக்காக காத்திருக்கிறீர்களா. இந்த நாமத்தை தினமும் சொல்லி வாருங்கள். விரைவில் வெற்றியின் வெளிச்சத்தை பார்ப்பீர்கள்.

நாமம் சொல்லும் கோயில்

அமாவாசையை பௌர்ணமியாக்கிய அபிராமி அன்னையை திருக்கடையூர் சென்று தரிசித்து வாருங்கள். அமாவாசை என்கிற அஞ்ஞானம் விலகி பௌர்ணமி என்கிற ஞானம் உங்களுக்குள் அபிராமியின் அருளால் உதிக்கும். சரபோஜி மன்னர் ஆட்சிக்காலத்தில் பக்தன் ஒருவருக்காக அபிராமி அம்பாள் ‘தை அமாவாசையை’ முழுப் பௌர்ணமியாக்கி ‘அபிராமி அந்தாதி’ அருள செய்த தலமும் இத்தலமே.அபிராமி அம்பிகையின் பக்தரான சுப்பிரமணிய பட்டர், அம்பிகையின் முகத்தை நினைத்துக்கொண்டே, சரபோஜி மன்னரிடம் ஒரு அமாவாசை தினத்தை, பவுர்ணமி என்று கூறிவிட்டார்.

எனவே மன்னர், அந்நாளை பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் மரணதண்டனை என்று சொல்லிவிட்டார். பட்டர் அக்னி வளர்த்து அம்பிகையை வேண்டி அபிராமி அந்தாதி பாடினார். அவர் 79ம் பாடல் பாடியபோது, அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது. அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி, அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர்.

79ம் பாடல் பாடும்போது, வெளியில் மின்விளக்கினை பவுர்ணமி நிலவைப்போல எரியச்செய்கிறார்கள். இந்த வைபவத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர். எமன் பாசக்கயிறை வீசினார். அவன் வீசிய பாசக்கயிறு மார்க்கண்டேயர் மீது மட்டுமே விழாமல் லிங்க உருவில் இருந்த அமிர்தகடேசுவரரையும் சேர்த்து சுருக்குப்போட்டு இழுத்தது. சிவபெருமான் கோபம் கொண்டு என்னையுமா இழுக்கிறாய் என்று கூறி காலனை எட்டி உதைத்து சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்துவிட்டார். அத்தோடு,

‘‘மார்க்கண்டா! நீ என்றும் பதினாறாய், சிரஞ்சீவியாய் இரு,’’ என்று அருளினார்.

இந்த தலத்தில் ஒரு கயிற்றில் எமனை கட்டி இழுத்தபடியும், மார்க்கண்டேயர் வணங்கியபடியும் காட்சி தருகின்றனர். சாதாரணமாக காலசம்ஹாரமூர்த்தியை தரிசிக்கும்போது, எமனை பார்க்கமுடியாது. பூஜை செய்யும்போது பீடத்தை திறப்பார்கள். அப்போது தான் எமனைப் பார்க்க முடியும். அதாவது எமன் இல்லாமல் சுவாமி, கையில் சூலத்துடன் காட்சி தருவதை ‘சம்ஹார கோலம்’ என்றும், எமனுடன் இருப்பதை ‘உயிர்ப்பித்த கோலம்’ என்றும் சொல்கிறார்கள். ஆக, ஒரே சமயத்தில் “சம்ஹார’ மற்றும்”அனுக்கிர மூர்த்தியை’ தரிசிக்கலாம்.

The post முதல் வெற்றியை முந்தித்தரும் நாமம் appeared first on Dinakaran.

Tags : Andrishkti ,Adi Shakti ,Lalita Sahasranamas ,Ramya Vasudevan ,Dinakaran ,
× RELATED அருள்மழை பொழியும் அகிலாண்டேஸ்வரி