×

இயற்கை உணவு… நிறங்களின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உணவியல் நிபுணர் வண்டார்குழலி

நாம் உண்ணும் தானியங்கள், காய்கள், பழங்கள், பருப்புகள், அசைவ உணவுகள் அனைத்தும் ஏதோ ஒரு குறிப்பிட்ட நிறத்தில்தான் இருக்கின்றன. அந்த நிறத்தைக் கொடுக்கும் நிறமிகள் கண்களுக்கு கவர்ச்சியான நிறத்தைக் கொடுக்கவும், அவற்றின் தனித்த அடையாளத்தைக் கொடுக்கவும் மட்டுமே பயன்படுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இவற்றையெல்லாம் கடந்து, அந்த இயற்கை உணவு நிறமிகள், உயிர்ச்சத்துக்களாகவும் மனித உடலுக்கு பல்வேறு வகையில் நன்மைகளை கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

இயற்கை நிறமிகளால் கிடைக்கும் பொதுவான நன்மைகள்

*தாவர வளர்ச்சிக்கும், சூரிய ஒளிச்சேர்க்கைக்கும், இனப்பெருக்கத்திற்கான கவர்ச்சிப் பொருளாகவும், உயிரியல் சார்ந்த அல்லது சாராத பிற தற்காப்புகளுக்கும் இயற்கை உணவு நிறமிகள் பயன்படுகின்றன.

*இயற்கை உணவு நிறங்கள் உடலுக்கு எவ்விதத் தீங்கும், பக்க விளைவும் ஏற்படுத்துவது கிடையாது.

*தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள், தாதுக்களிலிருந்து இயற்கை நிறமிகள் கிடைப்பதால், தீங்கு ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் அவற்றில் இருப்பதில்லை.

*மீண்டும் புதுப்பித்துக்கொள்ளக்கூடிய அல்லது உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய வகையிலேயே இருப்பதால், உடலுக்கும் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் உப பொருட்கள் எதுவும் உருவாவதில்லை.

*இயற்கை உணவு நிறங்கள் சற்றே விலை அதிகம் என்றாலும், சிறிதளவே உபயோகிப்பதால் நமக்குத் தேவையான உணவு நிறம் கிடைத்துவிடுவதுடன், பல வேறுபட்ட நிறங்களும் கிடைக்கின்றன.

*இயற்கை உணவு நிறமிகள், உணவில் சேர்ப்பதற்குப் பயன்படுவதுடன், மருந்துகள், நியூட்ராசியூட்டிகல் என்னும் மருந்துணவுகள் தயாரிப்பதற்கும் பயன்படுகின்றன.

*உணவுத் தொழிற்சாலைகளில் உணவுகளைப் பதப்படுத்துவதற்கும், உணவுகளின் தர நிர்ணயத்திற்கும் பயன்படுகின்றன.

இயற்கை நிறமிகளால் கிடைக்கும் உடல் நலன் சார்ந்த நன்மைகள்

*கேரட், சிவப்பு பனை எண்ணெய், பரங்கி, புரக்கோலி, பீன்ஸ், பசலைக்கீரை போன்றவற்றில் இருக்கும் ஆல்பா கரோட்டினாய்டு என்னும் ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு மற்றும் பச்சை உணவு நிறமிகள், செல்களில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தால் அழிவு ஏற்படுவதைக் குறைக்கின்றன.

*பசலைக்கீரை, கேரட், மாங்காய், சர்க்கரைவள்ளி, திராட்சை போன்றவற்றில் காணப்படும் பீட்டா கரோட்டின் என்னும் மஞ்சள், பச்சை நிறமிகள் புற ஊதாக்கதிர்களின் தாக்குதலில் இருந்து கண்களைக் காப்பதுடன், தண்டுவட நோய்களையும் தவிர்க்க உதவுகிறது.

*தக்காளி, சோளம், பட்டாணி, முட்டையின் மஞ்சள்கரு, சிவப்பு குடை மிளகாய் போன்றவற்றில் இருக்கும் பீட்டா க்ரிப்டோஸான்த்தின் என்னும் சிவப்பு நிறமியானது நுரையீரலில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கின்றன.

*திராட்சை, தர்பூசணி, கொய்யா, பப்பாளி போன்றவற்றில் காணப்படும் லைக்கோபின் என்னும் சிவப்பு நிறமியானது வாய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதுடன், நீரிழிவு, எலும்பு நோய் மற்றும் இதயநாள நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.

*பச்சை கீரைகள், இளந்தண்டுகள், முளைவிட்ட தானியங்கள், குடை மிளகாய், பட்டாணி போன்றவற்றில் இருக்கும் மஞ்சள் கலந்த பச்சை நிறமியான லியூட்டின், கண்களில் அழற்சி ஏற்படுவதைத் தவிர்க்கிறது.

*சோளம், மிளகு ஆகியவற்றில் இருக்கும் ஸிஸான்த்தின் என்னும் பச்சை நிறமியானது கண்ணில் இருக்கும் விழித்திரையைப் பாதுகாத்து, கண்களைக் காக்கிறது.

*ஆன்னாட்டோ என்னும் விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்றவைகளுக்கு மஞ்சள், ஆரஞ்சு கலந்த சிவப்பு பிக்ஸின், நார்பிக்ஸின் மற்றும் கரோட்டினாய்டு நிறமிகள் சிறந்த ஆன்ட்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன.

*பச்சை காய்கள், கீரைகளில் காணப்படும் குளோரோபில் நிறமியானது உடலின் நோய் எதிர்ப்புப் திறன் மற்றும் இரத்த செல்களின் செயல்திறனை அதிகரிப்பதுடன் இரத்ததிலிருந்து நச்சுப் பொருளை நீக்குதல் மற்றும் தோலுக்கு பாதுகாப்பளித்தல் போன்ற பயன்களையும் கொடுக்கிறது.

*மஞ்சள் கிழங்குகளில் இருக்கும் குர்குமின் என்னும் மஞ்சள் நிறமியானது புற்றுநோய் செல்களை அழித்துப் பரவாமல் தடுப்பதுடன், சளி, இருமல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பளித்து, நுரையீரலுக்கும் உறுதியளிக்கிறது.

*ஸ்பைருலினா என்னும் சுருள் பாசியிலிருந்து பெறப்படும் பைக்கோசயனின் என்னும் நீல நிறமியானது டி.என்.ஏ வில் ஏற்படும் சிதைவுகளைத் தடுப்பதுடன் செல்களில் உள்ள நொதிகளின் செயல்திறனையும் ஊக்குவிக்கிறது.

*நுண்கிருமிகளான Dunaliella salina, Hematococcus, Chromobacterium violaceum, Lactobacillus pluvalis, Agrobacterium aurantiacum, Mucor circinelloides போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சிவப்பு, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிறமிகள், ஆன்ட்டிஆக்ஸிடன்ட்டாகவும், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதயநோய்கள் தவிர்க்கும் காரணிகளாகவும் செயல்படுகின்றன.

செயற்கை உணவு நிறமிகள் இதற்கு நேர் எதிரான தீயவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. செயற்கை உணவு நிறங்கள் மக்குவதில்லை என்பதுடன், புற்றுநோய் செல்களை வளர்க்கும் காரணிகளாகவும் செயல்படுகின்றன என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேலும் செயற்கை நிறமிகள், சில உணவுகளின் உண்மை சுவையையும் மணத்தையும் மாற்றிவிடுகின்றன என்பதால், செயற்கை நிறமிகளான Blue FCF, Blue No1, No 2 போன்ற வற்றை பல நாடுகள் தடை செய்துள்ளன.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தாராளமாக எடுத்துக்கொள்வதன் காரணமாக, அவற்றில் சேர்க்கப்படும் செயற்கை உணவு நிறமிகளின் பயன்பாடும் அதிகரிக்கத் துவங்கியது. ஆனால், செயற்கை உணவு நிறமிகளின் தீமைகளை மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கியதிலிருந்து, அந்நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவுகளையும் தவிர்த்து வருவது வரவேற்கக்கூடிய ஒன்றுதான்.

ஆனால் அவற்றின் அமிலத்தன்மை, அதிக ஒளியில் மங்கி விடுதல், அடுத்தடுத்த நிறமி சேர்ப்பு, கரையும் தன்மை போன்றவற்றால் உணவு உற்பத்தியாளர்கள் சற்றே தயக்கம் காட்டுகின்றனர். இருப்பினும், நுகர்வோரின் விருப்பம், மாறிக்கொண்டு வருகின்ற சமூக பொருளாதார நிலை, மக்களின் வாங்கும் திறன், உணவியல் துறையில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப வளர்ச்சி போன்றவை, இயற்கை உணவு நிறங்களை மீண்டும் முழு வீச்சில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்குத் துணையாக இருக்கின்றன.

The post இயற்கை உணவு… நிறங்களின் நன்மைகள்! appeared first on Dinakaran.

Tags : Kuncumum ,Dr. ,Dietician Vandarkuzhali ,Dinakaran ,
× RELATED மண்பானை குடிநீரின் நன்மைகள்!