×

குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான கடைசி நாள், ஆகஸ்ட் 15 வரை நீட்டிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

திருச்சி: குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான கடைசி நாள், ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிராப்பள்ளியில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற “வேளாண் சங்கமம் 2023” விழாவில், வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். அத்துடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து, 12 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது அரசு பொறுப்பேற்று, செயல்படுத்திய திட்டங்களினால், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2021-2022-ம் ஆண்டு 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டு ஒரு சாதனையை நாம் படைத்திருக்கிறோம். உழவர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நமது அரசு, நிலத்தடி நீரினைப் பயன்படுத்தி, உழவர்கள் அதிக பாசனப் பரப்பில் வேளாண் செய்ய ஏதுவாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகளை வழங்கி சாதனை படைத்துள்ளது. அந்த சாதனை பயணத்தின் தொடர்ச்சியாகதான், மேலும் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் இந்த விழாவில் வழங்கப்படுகின்றன.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது இதுவரை 5 ஆயிரத்து 201 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2 ஆயிரத்து 504 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. நேற்று நான் திருச்சிக்கு வந்தபோது, செய்தித்தாளில் வந்த ஒரு செய்தியை பார்த்து இந்தத் துறையினுடைய அதிகாரிகளையும், அமைச்சரையும் அழைத்து அது பற்றி கேட்டேன். இந்த ஆண்டு சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான இறுதி நாளை ஆகஸ்ட் 15 வரை நீட்டித்து தரவேண்டும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை அரசிடம் வைத்திருப்பதாக ஒரு செய்தியை பார்த்தேன்.

நான் அவர்களோடு கலந்து பேசி அதை உடனடியாக அரசு ஏற்றுக்கொண்டு, ரூபாய் 75 கோடி மதிப்பிலான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை பெறுவதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படும் என்று மகிழ்ச்சியான செய்தியை இந்த விழாவின் மூலமாக நம்முடைய உழவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இதில் பங்கேற்று உங்கள் அனைவரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பை பெற்றமைக்காக மீண்டும் என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.

The post குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான கடைசி நாள், ஆகஸ்ட் 15 வரை நீட்டிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Chief Minister BC ,G.K. stalin ,Trichy ,Chief Minister BC. G.K. Stalin ,CM ,Dinakaran ,
× RELATED சேலம்-திருச்சி நெடுஞ்சாலையில் மாய மானை ராமர் தேடிய பொய்மான்கரடு