×

வயல்களில் இருந்து தலைதெறிக்க ஓடும் விலங்குகள்; சவுண்டு கேட்டாலே…சும்மா அதிருதுல்ல…அசத்தும் வனத்துறையின் அதிநவீன ஜீப்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் வனப்பகுதியில் அதிக சத்தம் எழுப்பும் ஜீப்பை கொண்டு வனத்துறையினர் விலங்குகளை விரட்டியடித்து வருகின்றனர். திருவில்லிபுத்தூர் நகரை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் இருந்து அடிவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் வந்து விளைநிலங்களை சேதப்படுத்தி விட்டு செல்கின்றன. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். அவ்வப்போது வனத்துறையினரும் வனவிலங்குகளை விரட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். எனினும் வனவிலங்குகளின் அட்டகாசம் தொடர்ந்தது.

இதனை தொடர்ந்து யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை விரட்ட வனத்துறையினர் புதிய யுக்தியை கண்டுபிடித்துள்ளனர். திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பத்திற்கு புதிதாக ஜீப் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஜீப்பில் ஆம்புலன்ஸ் சைரன் போல மூன்று மடங்கு அதிகம் சத்தம் எழுப்பும் இரண்டு சைரன் பொருத்தப்பட்டுள்ளது. இவை தவிர ஜீப்பின் நான்கு புறமும் அதிக வெளிச்சத்தை தரக்கூடிய விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி கடந்த ஒரு வாரமாக திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை வனத்துறையினர் வெற்றிகரமாக விரட்டி வருகின்றனர். தூரத்தில் ஜீப் வரும் சத்தம் கேட்டாலே யானைகள் ஓடுகின்றன. மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட அனைத்து விலங்குகளும் விவசாய நிலத்தை விட்டு ஓடுகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இந்த புதிய ஜீப்பில் எழுப்பும் ஒலி மிக சக்தி வாய்ந்தது. இரவில் ஒலி எழுப்பும் போது பல கிலோமீட்டருக்கு சத்தம் கேட்கிறது. அதிக சத்தத்துடன் இரவு நேரத்தில் ஒலி எழுப்பும்போது யானைகள் உட்பட வனவிலங்குகள் பதறி அடித்து விவசாய நிலங்களை விட்டு ஓடுகின்றன. மேலும் ஜீப்பில் உள்ள விளக்குகளை எரியவிடும் போது பகல் போல் காட்சியளிப்பதால் வனவிலங்குகள் பயந்து ஓடுகின்றன. இந்த ஜீப்பை பயன்படுத்தி யானை மற்றும் காட்டெருமைகள், காட்டு பன்றிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை சிரமமின்றி விரட்டி வருகிறோம் என தெரிவித்தனர்.

The post வயல்களில் இருந்து தலைதெறிக்க ஓடும் விலங்குகள்; சவுண்டு கேட்டாலே…சும்மா அதிருதுல்ல…அசத்தும் வனத்துறையின் அதிநவீன ஜீப் appeared first on Dinakaran.

Tags : Thiruvilliputhur ,Tiruvilliputhur ,Jeep ,department ,
× RELATED ஜீப் மோதி வாலிபர் பலி