×

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் நலத்திட்ட பணிகளை கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு

 

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் பல கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் திடீரென ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை அருகே உள்ள அம்பேத்கர் சிலை எதிரே இருந்த பழமை வாய்ந்த அரசு பயணியர் விடுதியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ரூ.3 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் வண்டலூர் வட்டாட்சியர் அலுவலக கட்டிட பணியும், இதேபோல் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலக கட்டிட பணியும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 31ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில், மந்தகதியில் நடைபெற்று வந்த கட்டிடங்களுக்கு சரி வர தண்ணீர் ஊற்றுவதில்லை என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று காலை திடீரென வந்து மேற்படி கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து தரமான முறையில் கட்டிட பணிகளை மேற்கொள்ளவும், இதனை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, நந்திவரத்தில் உள்ள நந்தீஸ்வரர் கோயில் எதிரே உள்ள குளத்தை ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், நந்திவரம் அரசு ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளிக்கு சென்று அங்கு கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வாங்கும் முகாமினை ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்களிடமும், பணியாளர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும், பள்ளி மாணவர்களிடம் சென்று கல்வி தரத்தை குறித்து ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, நந்திவரம் பெரிய ஏரி அருகில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வரும் பெரிய குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கவும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அப்போது, அவருடன் நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி, துணை தலைவர் ஜி.கே.லோகநாதன், வார்டு கவுன்சிலர்கள் சசிகலாசெந்தில், சதீஷ்குமார், ரவி உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

The post நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் நலத்திட்ட பணிகளை கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Collector ,Rahulnath ,Nandivaram-Kudovanchery Municipality ,Guduvanchery ,District Collector ,
× RELATED குழந்தை திருமணங்களை தடுக்க ஆய்வு கூட்டம்