×

சேலம் ரவுடிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை

 

சேலம், ஜூலை 27: தமிழகம் முழுவதும் ரவுடிகளை ஒடுக்குவதற்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ரவுடிகள் கைது செய்யப்பட்டும் கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர். சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியின் உத்தரவின்பேரில், மாநகரில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஒவ்வொரு காவல்நிலைய எல்லையில் உள்ள ரவுடிகளை அழைத்து அவர்களுக்கு அறிவுரை கூறுமாறு கமிஷனர் உத்தரவிட்டார். சேலம் மாநகரத்தை பொறுத்தவரையில் ஏ, ஏ.பிளஸ்(பெரிய ரவுடிகள்) ரவுடிகள் 75 பேர் உள்ளனர். அவர்களில் கைது செய்யப்பட்டு சிலர் சிறையிலும், வெளியிலும் உள்ளனர். சிறிய ரவுடிகள் 600க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த நிலையில், அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ரவுடிகள் அழைக்கப்பட்டனர் அம்மாபேட்டை காவல்நிலையத்தில் 20 ரவுடிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு உதவி கமிஷனர் செல்வம் அறிவுரை வழங்கினார். அப்போது, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறித்தல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். அதேபோல் இரும்பாலை காவல்நிலையத்தில் 9 ரவுடிகள் வந்திருந்தனர். அவர்களுக்கு இன்ஸ்பெக்டர் சாரதா அறிவுரை வழங்கினார். மாநகர் முழுவதும் இன்று 200க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு போலீஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாநகரில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 107 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். 81 ரவுடிகள் குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டோம் என நன்னடத்தை ஆவணம் பெறப் பட்டுள்ளது. தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

The post சேலம் ரவுடிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Salem ,DGP ,Shankar Jiwal ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் 85% பேருக்கு விநியோகம்