×

காசிமேடு கடற்கரையில் செல்போன், பணம் கேட்டு ஆந்திர மீனவர் அடித்து கொலை: இரண்டு வாலிபர்கள் கைது

தண்டையார்பேட்டை: காசிமேடு பழைய வார்ப்பு பகுதியில் உள்ள கடலில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக அந்த வழியாகச் சென்ற மக்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த நபர் ஆந்திர மாநிலம் சிக்காகுளத்தைச் சேர்ந்த லோகேஷ்வரன் (45) என்பதும், காசிமேடு பகுதியில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. இவர் 2 நாட்களுக்கு முன்புதான் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் காசிமேடு புதிய வார்ப்பு பகுதியில் தனியாக அமர்ந்து மது அருந்தியபோது மர்ம நபர்கள் அவரை இரும்புக் கம்பி மற்றும் கல்லால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் காசிமேடு அண்ணாநகர் குடிசைப் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் (21), சஞ்சய் (21) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இவர்கள் தான் கொலை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது தெரியவந்தது. கஞ்சா போதையில் வந்த நாங்கள், அப்பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்த லோகேஷ்வரனிடம் பணம், செல்போன் கேட்டு அவரை அடித்தோம்.

பின்னர் செல்போனை பறித்துக் கொண்டு அவர் முகத்தில் கடுமையாக அடித்தோம். அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த லோகேஷ்வரன் கடலில் விழுந்தார். நாங்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம்’’ என்று இருவரும் வாக்குமூலம் அளித்தனர். இதை தொடர்ந்து சாமுவேல், சஞ்சய் ஆகிய 2 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். பிறகு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post காசிமேடு கடற்கரையில் செல்போன், பணம் கேட்டு ஆந்திர மீனவர் அடித்து கொலை: இரண்டு வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Casimade beach ,AP ,Casimedu Old Casting Area ,Dinakaran ,
× RELATED ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...