×

குப்பையை தரம் பிரித்து வழங்கிய பொதுமக்களுக்கு தக்காளி பரிசு

வாலாஜாபாத்: தேவரியம்பாக்கம் ஊராட்சியில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து வழங்கிய 5 பேருக்கு தலா ஒரு கிலோ தக்காளி பரிசாக வழங்கப்பட்டது. வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண் திட்டத்தை மேம்படுத்தும் வகையில், ஊராட்சியில் உள்ள வீடுகள் தோறும் மக்கும், மக்கா குப்பையை மக்கள் தரம் பிரித்து வழங்க பச்சை, சிவப்பு நிற தொட்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துசுந்தரம், வட்டார ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு வீட்டினில் பயன்படுத்த சிறிய வகை குப்பை தொட்டிகளை வழங்கினர். இதில், மக்கும் குப்பை, மக்கா குப்பையை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் நாள்தோறும் வழங்குவது குறித்து விளக்கி கூறினர். மேலும், ஏற்கனவே வீடுகள் தோறும் மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரித்து வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், அதனை ஏற்று ஊராட்சியில் எந்தெந்த வீட்டில் உள்ளவர்கள் மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து தூய்மை பணியாளர்களும் வழங்கி வருகின்றனர் என கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் உள்ளிட்டோர் சிறப்பு பரிசாக 5 நபர்களுக்கு, ஒரு கிலோ தக்காளி வழங்கினார். இந்நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. மேலும் இதேபோன்று மக்கும் குப்பை, மக்கா குப்பையாக தரம் பிரித்து வழங்கும் அனைத்து வீடுகளுக்கும் நினைவு பரிசுகள் வழங்க உள்ளதாகவும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post குப்பையை தரம் பிரித்து வழங்கிய பொதுமக்களுக்கு தக்காளி பரிசு appeared first on Dinakaran.

Tags : Wallajahabad ,Devariyambakkam ,
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...