×

கொட்டையூர் ஊராட்சியில் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்

திருவள்ளூர்: சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு மக்கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொட்டையூர் இந்திரா நகர் காலனி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சாலைகள் தற்போது பயன்படுத்த முடியாத அளவுக்கு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

கடந்த சில நாட்களாக பெய்தமழையின் காரணமாக குண்டும் குழியுமாக உள்ள சாலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் மற்றும் குளித்துவிட்டு வெளியேற்றும் அழுக்குநீர் செல்ல முறையான வடிகால் வசதி இல்லாததால் சாலையில் தேங்கி மழை நீருடன் கழிவுநீர் கலந்து தொற்று நோய் பரப்பும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் சிறுவர், சிறுமியர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், வயதானவர்கள் என பலதரப்பட்ட மக்களும் இந்த கழிவு நீரில் மிதித்தபடியே சென்று வருகின்றனர்.

மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சேறும் சகதியுமான சாலையில் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலைகளை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கொட்டையூர் இந்திரா நகர் காலனியில் உள்ள பெருமாள் கோவில் தெரு அருகே, சேறும் சகதியமான துர்நாற்றம் வீசும் சாலையில் நாற்றுகளை நடும் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தங்களுக்கு சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைத்து தரவேண்டும். வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை முறையாக கொண்டு செல்ல வடிகால்வாய் வசதி அமைத்துத்தர அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக கொட்டையூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post கொட்டையூர் ஊராட்சியில் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kottayur panchayat ,Tiruvallur ,Tiruvallur district ,Kottayur ,Kadambatur ,Dinakaran ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...