×

பொங்கல் பரிசு திட்டத்திற்காக தொடக்க வேளாண் வங்கிகள் பெற்ற பணத்துக்கு வருமான வரியில் இருந்து விலக்களிப்பது குறித்து 6 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்: ஒன்றிய நிதி அமைச்சகத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இதற்காக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் பெற்ற ரூ. 1 கோடி வரையிலான தொகையை வருமானமாக கருதி, 2 சதவீத வரி செலுத்த வேண்டுமென மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் உத்தரவிட்டன. பின்னர் இந்த உத்தரவில் திருத்தம் செய்யப்பட்டு ரூ.3 கோடி என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ்நாடு முதல்வர், தமிழ்நாடு தலைமை செயலாளர் தரப்பில் ஒன்றிய நேரடி வரிகள் வாரியத்துக்கு அனுப்பிய கடிதம் மீதும் விரைந்து முடிவெடுக்கும்படி கடந்த மார்ச் 3ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, உயர் நீதிமன்றம் மார்ச் 3ம் தேதி பிறப்பித்த உத்தரவை ஏன் அமல்படுத்தவில்லை என்று வருமான வரித்துறையிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு வருமான வரித்துறை தரப்பில், தமிழ்நாடு அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைபதிவு செய்துகொண்ட நீதிபதி, தொடக்க வேலாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு வருமான வரி விலக்கு வழங்குவது தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கை மீது 6 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று ஒன்றிய நிதி அமைச்சகம் மற்றும் நேரடி வரிகள் வாரியத்துக்கும் உத்தரவிட்டு வழக்குகளை முடித்துவைத்தார்.

The post பொங்கல் பரிசு திட்டத்திற்காக தொடக்க வேளாண் வங்கிகள் பெற்ற பணத்துக்கு வருமான வரியில் இருந்து விலக்களிப்பது குறித்து 6 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்: ஒன்றிய நிதி அமைச்சகத்துக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union finance ministry ,Chennai ,Tamil Nadu ,Primary Agriculture ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...