×

மணிப்பூரில் நடைபெற்ற நிகழ்வுக்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும்

*நடிகை விஜயசாந்தி டுவிட்டரில் பதிவு

திருமலை : மணிப்பூரில் நடந்த நிகழ்விற்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் நடிகை விஜயசாந்தி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். கடந்த சில நாட்களாக பாஜகவிற்கு எதிராக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான விஜயசாந்தி விமர்சனம் செய்து வருகிறார். தெலங்கானா மாநில பாஜக தலைவராக கிஷன் பொறுப்பேற்ற போது கூட நிகழ்ச்சியின் நடுவில் இருந்து விஜயசாந்தி வெளியேறினார். அதற்கு காரணமாக தனி தெலங்கானா மாநிலம் அமைப்பதை எதிர்த்த ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்வராக இருந்த கிரண்குமார் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அவருடன் மேடையை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.

பாஜக தலைவர் பதவியில் இருந்து பாண்டிசஞ்சய் நீக்கியதற்கு விஜயசாந்தியும் எதிர்ப்பு தெரிவித்தார். தெலங்கானாவில் இரட்டை படுக்கையறை வீடுகளை வழங்க கோரி நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் பாஜக நடத்திய தர்ணாவில் அவர் பங்கேற்கவில்லை.தனக்கு பின் கட்சியில் இணைந்தவர்களுக்கு கட்சியில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு இல்லாததால் விஜயசாந்தி அதிருப்தியாக உள்ளதாக கூறப்படுகிறது. விஜயசாந்திக்கு பிறகு கட்சியில் இணைந்த ஈட்டல ராஜேந்தரா தேர்தல் மேலாண்மை குழு தலைவராக நியமிக்கப்பட்டார். இவைதவிர புதிய கமிட்டிகளில் இடம் தராததால் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

இந்நிலையில், விஜயசாந்தி பாஜகவை விட்டு விலகுவார் என சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வந்தது. பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த அநீதி குறித்து அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், மணிப்பூரில் நடந்த சம்பவம் சமுதாயத்தினருக்கு வெட்க கேடானது. இந்த செயல் ஒட்டுமொத்த நாட்டையும் தலைகுனிய வைத்துள்ளது. மேற்கண்ட செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எந்த மாநிலத்திலும் இதுபோன்ற குற்றங்கள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் பதிவிடப்பட்டுள்ளது. இது தற்போது தெலங்கானாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக அப்போதைய கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் விஜயசாந்தி. 2014 சட்டமன்ற தேர்தலில் மேடக் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். நவம்பர் 2020ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். தற்போது பாஜக தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மணிப்பூரில் நடைபெற்ற நிகழ்வுக்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Vijayashanthi ,Tirumala ,
× RELATED மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது