×

தரமான உணவு வழங்கக்கோரி விருத்தாசலம் கல்லூரி விடுதி மாணவர்கள் சாலை மறியல்

*அதிகாரிகள் சமாதானம்

விருத்தாசலம் : தரமான உணவு வழங்கக்கோரி விருத்தாசலம் அரசு கல்லூரி விடுதி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் சுற்று வட்டார பகுதியிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரிக்கு அருகிலேயே அரசு மாணவியர் நல விடுதி, அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி மற்றும் ஆலடி ரோடு முடக்கு அருகில் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி என 3 விடுதிகள் இயங்குகின்றன. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிக்கொண்டு, அரசு கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

தரமான உணவு, கழிவறை இல்லை எனக்கூறி நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி நுழைவாயில் முன்பாக விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த கல்லூரி முதல்வர் ராஜவேல், வட்டாட்சியர் அந்தோணிராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வட்டாட்சியர் மற்றும் கல்லூரி முதல்வர் விடுதிகளை பார்வையிட்டு குறைபாடுகளை விரைவாக சரி செய்வதாக உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post தரமான உணவு வழங்கக்கோரி விருத்தாசலம் கல்லூரி விடுதி மாணவர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Vridthachalam college ,Vridthachalam ,Vridthachalam government ,Vritthachalam college ,Dinakaran ,
× RELATED மகளிர் காவல் நிலையம் முன் இளம்பெண் தர்ணா