×

15 ஆண்டாக வறண்டு கிடக்கிறது பஞ்சப்பட்டி ஏரியை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

*அப்புறப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

கிருஷ்ணராயபுரம் : கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி ஏரியில் அடர்ந்து காணப்படும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் மிகப்பெரிய ஏரிகளில் பஞ்சபட்டி ஏரி மூன்றாவது ஏரியாக உள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 1170 ஏக்கர். இதன் கொள்ளளவு 18 ஆயிரம் கன அடியாகும். ஏரி முழு கொள்ளளவு எட்டியவுடன் ஏரியின் கிழக்குப் பகுதியில் சட்டர்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக உபரி நீர்கள் திறந்து விடப்படும். இந்த உபரி நீரானது வாய்க்கால் மூலமாக சென்றடைந்து இறுதியில் குடமுருட்டி ஆற்றில் கலக்கிறது.

பருவமழை முறையாக பெய்து வந்தால் பஞ்சப்பட்டி ஏரி நிரம்பி சுற்று வட்டாரத்தில் உள்ள தாதம்பட்டி, குமட்டேரி, வெள்ளாளப்பட்டி, சுரக்காய் பட்டி, ஒத்தம்பட்டி, வீரியபாளையம், சுக்காம்பட்டி, காரைக்குடி, கரட்டுப்பட்டி, வயலூர், மேட்டுப்பட்டி போன்ற பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெறும். விவசாயம் நன்றாக இருந்தால், அப்பகுதி மக்கள் உணவு மற்றும் பணத்திற்கு பஞ்சம் இல்லாமல் காலத்தை கடத்துவார்கள். வானம் பார்த்த பூமியாக திகழும் இப்பகுதி மக்களுக்கு பஞ்சப்படி ஏரி ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

மேலும் பஞ்சப்பட்டி ஏரியில் தண்ணீர் இருந்தால் ஏரியின் சுற்றிலும் உள்ள 10கிலோ மீட்டர் தூரத்தி உள்ள கிணறுகளில் நிலத்தடி நீரின் அளவு ஆண்டு முழுவதும் இருந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் விவசாயிகள் முப்போகமும் விவசாயம் செய்வார்கள்.பஞ்சப்பட்டி ஏரி கடந்த 15 ஆண்டுகளாக தண்ணீரின்றி வறண்ட நிலையில் இருந்தது. இருப்பினும் கடந்த 2022 ஆண்டு அக்டோபர் மாதம் கடவூர் மலைப்பகுதியில் பெய்த மழையால் ஏரிக்கு ஓரளவு தண்ணீர் வரத்து இருந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ஒருசில மாதங்களிலே ஏரியில் இருந்த சிறிதளவு தண்ணீரும் வெயிலின் தாக்கம் மற்றும் போதிய மழை பொழிவு இல்லாததால் ஏரி மீண்டும் வறண்ட சூழ்நிலைக்கு மாறியது.

தற்சமயம் பஞ்சப்பட்டி ஏரி முழுவதும் சீமை கருவேலம் முட்கள் சூழ்ந்துள்ளதால் ஏரியின் நிலைத்தடி நீரை சீமை கருவேல மரங்கள் உறிஞ்சி எடுத்துவிடுகிறது. இதனால் சுற்றுவட்டார கிணறுகளிலும் தண்ணீர் அதலபாதாளத்திற்கு சென்று சாகுபடி பணியும் பாதிப்படைந்துள்ளது. எனவே ஆடி பட்டம் மழை பெய்வதால் ஏரியில் தண்ணீர் சேமிப்பதற்கு ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post 15 ஆண்டாக வறண்டு கிடக்கிறது பஞ்சப்பட்டி ஏரியை ஆக்கிரமித்த கருவேல மரங்கள் appeared first on Dinakaran.

Tags : Panchapatti lake ,Krishnarayapuram ,Karur district ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் காற்றுடன்...