×

பெரும்பாறை மலைச்சாலையில் வளைவுகளில் விபத்தை தடுக்க குவிலென்ஸ் பொருத்த வேண்டும்-வாகனஓட்டிகள் கோரிக்கை

பட்டிவீரன்பட்டி : பெரும்பாறை மலைச்சாலையில் ஆபத்தான வளைவுகளில் விபத்தை தடுக்க குவிலென்ஸ் பொருத்த வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல், வத்தலக்குண்டு போன்ற நகரங்களிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, மங்களங்கொம்பு, தாண்டிக்குடி, பண்ணைக்காடு வழியாக கொடைக்கானல், கும்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது மாநில நெடுஞ்சாலைக்கு உட்பட்ட சாலையாகும்.

இந்த மலைப்பாதையில் பல இடங்களில் கொண்டை ஊசி வளைவுகளும், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு ஆபத்தான வளைவுகளும் உள்ளன. இதனால் மலைச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரிவதில்லை. இதன் காரணமாக இம்மலைச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக டூவீலர்களில் செல்பவர்கள் அதிவேகமாக வளைவுகளில் திரும்பும் போது வாகனங்கள் வருவதை தெரிந்து கொள்ள முடியாததால், விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. எனவே இம்மலைப்பகுதியில் விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் ஆபத்தான வளைவுகளில் குவிலென்ஸ் கண்ணாடி (கான்வெக்ஸ் மிர்ரர்) பொருத்த வேண்டும் என மாநில நெடுஞ்சாலை துறையினருக்கு வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறு குவிலென்ஸ்களை நிறுவினால், விபத்து குறைவது மட்டுமின்றி வளைவுகள் மற்றும் திருப்பங்களில் வாகனங்கள் வருவதை எளிதில் காண முடியும் என வாகனஓட்டிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பால்ராஜ் (சமூக ஆர்வலர்) கூறியதாவது, ‘இந்த மலைப்பகுதிகளில் குவிலென்ஸ்களை நிறுவினால், விபத்து குறைவது மட்டுமின்றி வளைவுகள் மற்றும் திருப்பங்களில் வாகனங்கள் வருவதை எளிதில் காணமுடியும். இது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். கொடைக்கானல்- வத்தலக்குண்டு சாலையில் இதுபோன்ற குவிலென்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளிலும் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

ரமேஷ் (மலைத்தோட்ட விவசாயி) கூறியதாவது, ‘பட்டிவீரன்பட்டி, சித்தரேவு, அய்யம்பாளையம், நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான மலைத்தோட்ட தொழிலாளர்களும், விவசாயிகளும் இந்த பெரும்பாறை மலைச்சாலையை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த மலைச்சாலை சுமார் 50 மலைக்கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும்.
இதனால் குவிலென்ஸ் பொருத்தினால் பாதுகாப்பான பயணத்திற்கு பயனுள்ளதாக அமையும்’ என்றார்.

The post பெரும்பாறை மலைச்சாலையில் வளைவுகளில் விபத்தை தடுக்க குவிலென்ஸ் பொருத்த வேண்டும்-வாகனஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pattiveeranpatti ,Perumparai ,Dinakaran ,
× RELATED பெரும்பாறை மலைப்பகுதியில்...