×

கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிப்பு..!!

பெங்களூரு: கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கே.எஸ்.ஆர். அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 3 தினங்களுக்கு முன்பு கபினி, கே.எஸ்.ஆர். அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 5 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

நேற்று மதியம் சரியாக 2 மணியளவில் தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. காலை 6 மணிக்கு வினாடிக்கு 5,100 கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து 10.30 மணிக்கு 7,500 கனஅடியாக உயர்ந்து, தற்போது 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவர் பாணி, திடீர் அருவி, மெயின் அருவி என அனைத்து அருவிகளும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இன்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 2,853 கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியும், 2 அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 22,800 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தமிழ்நாட்டுக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

The post கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Karnataka ,Tamil Nadu ,Piligundulu ,BENGALURU ,Cauvery… ,Pilikundulu ,
× RELATED காவிரியில் 2.5 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு பரிந்துரை