×

தண்டராம்பட்டு அருகே பண்ணை வீட்டில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு

* சடலத்தை பண்ணையிலேயே புதைத்த கிராமத்தினர்
* போலீசார், வருவாய் துறையினர் விசாரணை

தண்டராம்பட்டு, ஜூலை 26: தண்டராம்பட்டு அருகே பண்ணை வீட்டில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பின்னர் கிராம மக்கள் சடங்குகள் செய்து அங்கேயே புதைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதியில் அய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த நெடுங்காவடி கிராமத்தில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இடம் வாங்கி அங்கு பண்ணை வீடு கட்டி அதில் வசித்து வந்துள்ளார். பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா நாட்டை சேர்ந்தவர்கள் அவர்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர். அப்போது அந்த வீட்டை ஏற்கனவே திருவண்ணாமலையில் தங்கியிருந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு வாடகைக்கு விட்டு சென்றுள்ளனர். அந்த பெண் தனிமையில் பண்ணை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அவரை அங்கிருப்பவர்கள் மீனாட்சியம்மாள் என அழைப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில் மீனாட்சியம்மாளை திருவண்ணாமலையை சேர்ந்த ஹரி என்பவர் ஞாயிற்றுக்கிழமை தோறும் அங்கு சென்று பார்த்து அவருக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி வழக்கம்போல் ஹரி பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹரி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மீனாட்சியம்மாள் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர், ஹரி மற்றும் கிராமத்தினர் மீனாட்சியம்மாள் உடலை சடங்குகள் செய்து அதே பண்ணை வீட்டில் புதைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஹரி இறந்த மீனாட்சியம்மாளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு விஏஓ சாலம்மாளிடம் மனு கொடுத்துள்ளார். பின்னர், மனு மீது விசாரணை செய்த விஏஓ இறந்த பெண் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்பதால் சந்தேகமடைந்து இதுகுறித்து சாத்தனூர் அணை காவல் நிலையம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் போலீசார், தாசில்தார் அப்துல், ரகூப் மண்டல துணை தாசில்தார் மோகன ராமன், டிஎஸ்பி தேன்மொழி வெற்றிவேல், வருவாய் ஆய்வாளர் சத்திய நாராயணன், விஏஓ மற்றும் அதிகாரிகள் பண்ணை வீட்டிற்கு சென்று மீனாட்சியம்மாள் சடலம் புதைத்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர், இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘உயிரிழந்து புதைக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண்ணின் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்ததும் அவரிடம் புகார் பெற்று அதன் பின்னர், இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து பிேரத பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னரே, அவர் எப்படி இறந்தார்? இயற்கையாகவே இறந்தாரா அல்லது பணத்திற்காக அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என்பது தெரியவரும் எனக் கூறினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தண்டராம்பட்டு அருகே பண்ணை வீட்டில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thandaramptu ,Dandarampattu ,Dinakaran ,
× RELATED கடந்த ஆண்டு ஒரு கிலோ ₹10 முதல் ₹13 வரை...