×

கொடநாடு வழக்கு: ஆத்தூரில் திடீர் விசாரணை

ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு போலீசார் நேற்று திடீர் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு குறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் பலியானது குறித்தும் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

அந்த வகையில் கொடநாடு கொலை- கொள்ளை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள பொறியியல் பிரிவிற்கு நேற்று மாலை திடீரென வந்தனர். அங்கிருந்த அலுவலர்களிடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ், டூவீலரில் வந்தபோது ஏற்பட்ட விபத்து நடந்த பகுதி, நகராட்சிக்குட்பட்டதா? அந்த சாலை எப்போது போடப்பட்டது, சாலையின் தரம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் குறித்த விவரங்களை கேட்டு, குறிப்புகளை பெற்றுக் கொண்டு சென்றனர்.

அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த விசாரணையினால், நகராட்சி அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சிக்கு வந்த பொதுமக்கள் யாரும் பொறியியல் பிரிவிற்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் கேட்டபோது, விபத்து நடந்த பகுதி சாலை குறித்தும், சாலையின் தரம் குறித்தும் விவரங்களை ஏற்கனவே அலுவலகம் மூலமாக கொடுக்கப்பட்டிருந்தது. அது குறித்து, நேரடியாக விசாரணை நடத்தினார்கள் என தெரிவித்தனர்.

The post கொடநாடு வழக்கு: ஆத்தூரில் திடீர் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Attur ,Athur ,Special Investigation Police ,Koda Nadu ,Dinakaran ,
× RELATED நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் ஆத்தூர்...