×

இரட்டை கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ரத்து..!!

மதுரை: இரட்டை கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டது. மதுரை குன்னத்தூரை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், தனது சகோதரன் கிருஷ்ணன் மதுரை மாவட்டம் வரிச்சியூர் அருகே குன்னத்தூரில் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். அவரும் அவரது நண்பர் முனியசாமியும் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் குன்னத்தூர் அகஸ்தியர் குளம் கோயில் அருகில் கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலையில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திருப்பதி, ஊராட்சி செயலர், குன்னதூர் ஊராட்சியின் பொறுப்பு செயலர் பால்பாண்டி, வரிச்சியூர் செந்தில், குன்னத்தூர் பாலகுரு ஆகியோரை கருப்பாயூரணி போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்கவிடும் நோக்கில் போலீசார் செயல்பட்டு வருகிறார்கள். எனவே இரட்டை கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கேட்டிருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கொலை வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட செந்தில் குமார் கைது செய்யப்படாதது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

பின்னர் செந்தில் மாயமாகிவிட்டதாகவும், அவரை கண்டுபிடிக்கக்கோரி அவருடைய மனைவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தாக்கல் செய்த அறிக்கையில், குன்னத்தூர் இரட்டை கொலை வழக்கை செல்லூர் காவல் உதவி ஆணையர் விஜயகுமார் விசாரித்துள்ளார். அவர் விசாரணையில் பல்வேறு குளறுபடிகளை செய்துள்ளார்.

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த செந்தில் 2021 ஜனவரியில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் வரிச்சூர் செல்வம் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று அறிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கு விசாரணையில் உதவி காவல் ஆணையர் விஜயகுமார் பல்வேறு தவறுகள் புரிந்துள்ளார். இந்த மனு நிலுவையில் இருந்த போது முறையாக விசாரணை செய்யப்படாமல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். அந்தக் குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டுள்ளது.

ஆனால், குற்றச்சாட்டு பதிவு இன்னும் நடைபெறவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும் மேலும் விசாரணைக்கு உத்தரவிடலாம் என உத்தரவிட்டுள்ளது. இரட்டை கொலை வழக்கில் கடந்த 2021 ஏப்ரல் 28ல் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்க தென் மண்டல ஐ.ஜி சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும். அந்தக் குழு 2 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும். செல்லூர் உதவி காவல் ஆணையர் விஜயகுமார் மீது வன்கொடுமை சட்டம் மற்றும் பிற உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

விஜயகுமார் மீது உள்துறை செயலாளர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிற உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. கொலை வழக்கில் சிறப்பு விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு உதவிபுரிந்த தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார். அவரது ஆடியோ, வீடியோ விசாரணை முறை ஏற்கப்படுகிறது. இந்த முறையை அனைத்து வழக்குகளிலும் பின்பற்ற விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

 

The post இரட்டை கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,court ,Madurai court ,Baskaran ,Kunnathur ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...