×

திருப்பெரும்புதூர் இராமானுஜர் மணிமண்டபத்தினை பயன்பாட்டிற்கு கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

காஞ்சிபுரம்: திருப்பெரும்புதூர் இராமானுஜர் மணிமண்டபத்தினை பயன்பாட்டிற்கு கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று திருப்பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி (இராமானுஜர்) திருக்கோயில் மற்றும் இராமானுஜர் மணிமண்டபத்தினை ஆய்வு செய்து, மணிமண்டபத்தினை விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது, ஓம் நமோ நாராயணா என்ற மூல மந்திரத்தை எடுத்து அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் கொண்டு சேர்த்த சமூக நீதியின் காவலர் இராமானுஜர் என்பதால் தான் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் இராமானுஜர் பற்றி தொடர் எழுதி அதனை வாரந்தோறும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தார். அவர் வழியில் செயல்படும் முதலமைச்சர் அவர்கள் 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களை புனரமைக்க 2022-2023ம் ஆண்டு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தந்ததினால் 46 பழமையான திருக்கோயில்களிலும், உபயதாரர் நிதியின் மூலம் 66 திருக்கோயில்களிலும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் இந்த ஆண்டும் ரூ. 100 கோடியை ஒதுக்கீடு செய்து தந்திருக்கின்றார். அதில் 64 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றன. அந்தப் பணிகளில் திருப்பெரும்புதூர், இராமானுஜர் திருக்கோயிலும் ஒன்றாகும். இந்த திருக்கோயிலுக்கு 2008ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது, ஆகவே மீண்டும் குடமுழுக்கு நடத்திட மாநில வல்லுநர் குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் பணிகள் தொடங்கப்படும். கடந்த ஆட்சிக் காலத்தில் எவ்வித திட்டமிடல் இல்லாமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அவசர கோலத்தில் பணிகள் எதுவும் முடிவுறாத நிலையில் முடிவுற்றதாக கணக்கு காட்டி 2021 பிப்ரவரி 26ம் தேதியன்று நூற்றுக்கணக்கான பணிகளை திறந்து வைத்து விட்டு சென்றார்கள்.

அதில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இராமானுஜர் மணிமண்டபமும் ஒன்றாகும். இந்த மணிமண்டபத்தினை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர் அன்பரசனும், சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகையும், முதலமைச்சரிடம் வைத்த கோரிக்கைக்கு ஏற்ப இன்றைக்கு இந்த இடத்தை முழுமையாக ஆய்வு செய்து இருக்கின்றோம். முதல் கட்டமாக அடர்ந்த தேவையற்ற செடி கொடிகளை அகற்றி, பாதைகளை மக்கள் நடமாடும் வகையில் சரிசெய்யப்படும். இந்த இடத்தில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடங்கிட ஏற்கனவே இரண்டு முறை விளம்பரம் தந்தோம். இதுவரை யாரும் விண்ணப்பிக்கவில்லை. தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி பள்ளியை அமைப்பதற்கு உண்டான முயற்சியை துறை மேற்கொள்ளும்.

இராமானுஜர் மணி மண்டபத்தில் அவரது வரலாற்றை சித்தரிக்கின்ற வகையில் புகைப்பட கண்காட்சியுடன், ஒலி ஒளி காட்சியோடு ஏற்பாடு செய்வதற்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அது தொடர்பாக தனியார் ஆலோசகர் மூலம் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் 15 நாட்களுக்குள் வரைபடங்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் இங்கு வருகை தந்து ஆய்வு செய்ய இருக்கின்றோம். குடமுழுக்கு பணிகளைப் பொறுத்தளவில் பல பணிகள் நீண்ட காலம் எடுக்கும். கட்டடம் கட்டிட பணிகள் விரைவாகவும், சுதைகள் செய்யும் பணிகள், கற்சிற்ப பணிகள் போன்ற நேர்த்தியாக செய்யப்பட வேண்டிய பணிகளுக்கு கால அளவு அதிகமாகவும் தேவைப்படும்.

ஆகவே திருப்பணிகளை உரிய காலத்திற்கு முடிக்கப்படும். 400 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த திருவெட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், 100 ஆண்டுகளுக்கு மேல் குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த 16 திருக்கோயில்களில் குடமுழுக்கை கூட நடத்திக் காட்டிய ஆட்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய ஆட்சியாகும். இதுவரை 866 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி ஒரு ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் திருமதி இரா. வான்மதி, உதவி ஆணையர் திரு. லட்சுமிகாந்த பாரதிதாசன், திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. ஜா. சரவண கண்ணன், ஒன்றிய குழுக் தலைவர் திரு.எஸ்.வி கருணாநிதி, பேரூராட்சித் தலைவர் திருமதி சாந்தி சதீஷ்குமார், திரு ந. கோபால், திருக்கோயில் செயல் அலுவலர் திரு, கார்த்திகேயன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருப்பெரும்புதூர் இராமானுஜர் மணிமண்டபத்தினை பயன்பாட்டிற்கு கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tirupperumbudur ,Ramanujar ,Minister ,Sekarbhabu ,Kanchipuram ,P. K.K. segarbabu ,Tamil Nadu ,Ramanujar Manimandabadin ,Segarbabu ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...