×

அஜந்தா குகை ஓவியங்கள் : உலக பண்பாட்டு சின்னம்

அஜந்தா குகைகள் என்பவை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புத்த மத சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படும்,பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் ஆகும்.
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107 கி.மீ தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. இங்கிருந்து 12கி.மீ தொலைவில் காணப்படும் குடைவரைக் கோயில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடம் கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை. குகைகளை முன்பு மழைக்காலத்தில் ஓய்வெடுக்கும் இடமாக புத்தபிட்சுகள் பயன்படுத்தியிருக்கின்றனர். கி.மு.2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக இவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியத் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டுவரும் அஜந்தா குகைகள் பற்றி சீனப்பயணி யுவான் சுவாங் குறிப்பெழுதியிருக்கிறார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏப்ரல் 1819ல் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த பிரித்தானிய அதிகாரியான ஜான் ஸ்மித் வேட்டையாடுவதற்காக அஜந்தா காட்டுக்குள் சென்றுள்ளார். ஒரு புலியை அவர் துரத்திச்சென்றபோது மாடுமேய்க்கும் பையன் ஒருவன் புலிகள் தங்குமிடம் என இக்குகைகளை சுட்டிக்காட்டினான். புதர்மண்டி மூடிக்கிடந்த பத்தாவது குகைக்குள் சென்று அவர் ஓவியங்களைக் கண்டுபிடித்தார். அப்படித்தான் கிட்டத்தட்ட ஆயிரத்தி இருநூறு வருடங்களாக மறைந்து கிடந்த 29 அஜந்தா குகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. வகோரா நீரோடையை தொட்டபடி குதிரைக்குளம்பு போன்ற வடிவத்தில் நீண்டுகிடக்கும் குகைகளின் உயரம் சுமார் 76 மீட்டர் ஆகும். இங்கு நடந்த பல்வேறுகட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரையிலும் 30 குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்பது, பத்து ,பத்தொன்பது, இருபத்தாறு இருபத்தொன்பதாம் குகைகள் சைத்யங்கள். அதாவது பௌத்த வழிபாட்டிடங்கள். எஞ்சியவை துறவியர் தங்கும் விகாரங்கள்.

கலைநயம் மிக்க பெரிய தூண்கள், மண்டபங்கள், சிலைகள், புத்தரின் பல்வேறு வடிவங்கள் என ஒவ்வொரு குகையிலும் ஒவ்வொருவகை ஆச்சரியம் நிரம்பியிருப்பதும் அஜந்தாவின் கூடுதல் சிறப்பு. இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரமிக்கத்தக்க அஜந்தா குகைகள் 1983ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது.

The post அஜந்தா குகை ஓவியங்கள் : உலக பண்பாட்டு சின்னம் appeared first on Dinakaran.

Tags : Ajanda ,Ajanda Caves ,Maharashtra, India ,Ajantha ,
× RELATED கதவு, பூட்டு இல்லாத கிராமம்!