×

ஆதனக்கோட்டை பகுதியில் மல்லிகை பூ சாகுபடி அமோகம்

கந்தர்வகோட்டை : கந்தர்வக்கோட்டை அடுத்த ஆதனக்கோட்டை பகுதியில் மல்லிகை பூ சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் தற்போது குறுவை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்சமயம் கரும்பு, மரவள்ளி கிழங்கு, நெல் நடவு செய்துவரும் வேளையில் பூ சாகுபடியிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

குறைந்த அளவு தண்ணீரில் பலன் கொடுக்க கூடியது என்பதால் பூ சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இங்கு மல்லிகை, செண்டிபூ, கோழிக்கொண்டை ரோஸ், பிச்சிப்பூ, ரோஜாப்பூ உள்ளிட்ட வகைகளை சாகுபடி செய்கின்றனர். இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் புதுக்கோட்டை பூ சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது.இங்கிருந்து விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பூக்கள் திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது, ஆதனக்கோட்டை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகைப்பூ செடிகளில் இருந்து பெறப்படும் பூக்களை விவசாயிகள் எடுத்து மார்க்கெட்டுக்கு அனுப்ப தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், பூக்கள் சாகுபடிக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதில்லை என்பதால் இப்பகுதியில் அதிகம் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆடி மாதம் துவங்கி உள்ளதால் கோயில்களுக்கு அதிகம் பூக்கள் தேவைப்படும். மேலும், பெண்களுக்கு பிடித்த வகைகளில் முக்கியத்துவம் வகிப்பது மல்லிகை. இதன் வாசமே மனதை மயக்கும் தன்மை கொண்டது என்பதால் அனைவரும் விரும்பக்கூடிய பூவாகும்.

தற்போது இங்கு பெறப்படும் மல்லிகைப்பூ கிலோ ஒன்றுக்கு ரூ.400 முதல் 500 ரூபாய் வரை விலை போகிறது. தற்போது பூக்கள் அதிகம் விளைவதால் பறிக்க ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே எனது குடும்பத்தார் மட்டுமே பூக்களை பறித்து விற்பனைக்கு கொண்டு செல்கிறோம். பூ சந்தையில் ஒரே சீரான விலையில் இல்லாமல் இருப்பதால் வேலையாட்களுக்கு ஊதியம் கொடுப்பது சிரமம் ஏற்படுகிறது. கந்தர்வகோட்டை உழவர் சந்தையில் பூச்சந்தை உருவாக்க வேண்டும் என பூ உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள் என்றார்.

The post ஆதனக்கோட்டை பகுதியில் மல்லிகை பூ சாகுபடி அமோகம் appeared first on Dinakaran.

Tags : Adanakottai ,Gandharvakottai ,Adhanakottai ,Pudukottai ,Dinakaran ,
× RELATED ஆதனக்கோட்டை பகுதியில் கொத்து கொத்தாக காய்க்க துவங்கிய மாங்காய்