×

அதிகாரத்தைப் பகிர்தல்

கிறிஸ்துவம் காட்டும் பாதை

(விடுதலைப் பயணம் 18: 13-27)

இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக்கப்பட்டனர். மிகவும் கொடூரமான சட்டங்களால் ஆளப்பட்டனர். கடுமையான போராட்டங்களுக்குப் பின் கடவுளின் வழிநடத்துதலால் மோசேயின் தலைமையில் எகிப்து நாட்டை விட்டு வெளியேறினர். இவ்வாறு விடுதலை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை சுமார் ஆறு லட்சம் எனப்படுகிறது.

அக்காலத்தில், இது மிகப் பெரிய மக்கள் தொகையாகும். இவர்களில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள், கைக்குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எனப் பலவகைப்பட்டோர் இருந்திருப்பர். இவர்களில் பலர் பலருக்கு நேரடியாக அறிமுகமில்லாதவராகவும் இருந்திருப்பர். இவர்களுக்குள் நாகரிகம் பழக்க வழக்கம் மற்றும் குணத்தில் வேறுபாடு இருந்திருக்கும்.

இதற்கு மேல் இவர்கள் சந்திக்கும் புதிய பிரச்னைகள் எண்ணிலடங்கா. அவற்றை எதிர்கொள்வது மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது எனலாம். அடிமைகள் என்றாலும், குடியமர்ந்த சமூகமாக தங்கள் வீடுகளில் வாழ்ந்து தினமும் உழைத்துக் கூலியைப் பெற்று உண்டு வந்தனர். இப்போது பாலை வனத்தில் நாடோடிச் சமூகமாக கூடாரமடித்துத் தங்கி உணவுக்காகத் தேடி அலையும் புதிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

பாலைநிலத்தில் உணவுப் பொருட்களைச் சேகரிப்பது வேட்டையாடுவது பதப்படுத்தியிருந்த உணவைச் சிறுகச் சிறுகச் செலவழிப்பது என்பது அவர்களின் தினவாழ்க்கையாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாகக் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் இதரப் பயன்பாட்டிற்கும் தண்ணீரைத் தேடுவது என்பது மிகப் பெரிய சவால். இது போதாதென்று அவர்கள் தங்களுடன் அழைத்து வந்த பெருந்திரளானக் கால்நடைகளுக்குத் தீவனமும் தண்ணீரும் கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக அமைந்தது.

இவ்வாறு மிகத் திரளான மக்கள் மிகக் குறைந்த மூலாதாரங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் சமூக உறவைக் கட்டிக் காப்பதிலும் அவர்களுக்குள் பிரச்னைகள் வழக்குகள் சண்டைகள் வரத்தொடங்கியது. இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காண அவர்கள் தங்கள் தலைவரான மோசேயை நாடி வந்தனர். அவரும் காலை முதல் மாலை வரை பிரச்னைகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கி வந்தார். பிரச்னைகளோடு வந்தவர்கள் மணிக் கணக்கிலும் நாட்கணக்கிலும் காத்திருக்க வேண்டியிருந்தது. இதை அருகிலிருந்து கண்ட மோசேயின் மாமனாரான இத்திரோ மோசேவுக்குக் கீழ்க்கண்ட ஆலோசனையை வழங்கினார்.

‘‘மக்கள் அனைவரிலும் திறமையும், இறையச்சமும், நாணயமும் கொண்டு கையூட்டை வெறுக்கும் பண்பாளரைக் கண்டுபிடியும். அவர்களை ஆயிரமவர், நூற்றுவர், ஐம்பதின்மர், பதின்மர் ஆகிய குழுக்களின் தலைவர்களாக நியமிப்பீர். அவர்கள் எப்பொழுதும் மக்களுக்கு நீதி வழங்கட்டும். முக்கிய விவகாரங்கள் அனைத்தும் உம்மிடம் கொண்டு வரட்டும். சிறிய காரியங்களில் அவர்களே நீதி வழங்கட்டும். ஆக உமக்குச் சுமை குறையும்.

அவர்களும் உம்மோடு பொறுப்பேற்பர்” என்று ஆலோசனை வழங்கினார். மோசே இந்த ஆலோசனையை ஏற்று உடனே அதை நடைமுறைப்படுத்தினார். இவ்வாறு ஒரு தொன்மைச் சமுகம் தனக்குள் மக்களாட்சி முறையையும் அதிகாரப் பகிர்வையும் ஏற்படுத்திக் கொண்டது, நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இது அவர்களுக்குள் சற்று எளிதாக நடைபெறுவதற்கு பல காரணங்கள் இருந்தன எனலாம்.

1) அச்சமூகம் ஏறக்குறைய கல்வி, அறிவு, உழைப்பு, செல்வம் அனைத்திலும் சமமாக இருந்தது.

2) அது குடியமர்ந்த சமூகத்திலிருந்து நாடோடிச் சமூகமாக மாறி இருந்தது.

3) தனி உடைமைக்கு அங்கு இடமில்லை. நிலமோ இதர வளங்களோ பொதுவாக இருந்தது.

4) சாதி, இனம் எனும் பாகுபாடும் ஏற்றத் தாழ்வும் அங்கு இல்லை. யாரும் யாருக்கும் மேலானவர்களோ அல்லது கீழானவர்களோ இல்லை.

5) யாவற்றிற்கும் மேலாக தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுதந்திர நாட்டை நோக்கிச் செல்ல வேண்டும் எனும் குறிக்கோள் யாவரிடத்திலும் இருந்தது.

6) இன்று இந்தியாவில் மக்களாட்சி முறை முழுமையடையாமலிருக்க ஆணாதிக்கம் சாதி மற்றும் வர்க்கப்பிரிவினை தடையாக இருப்பதை இந்தியாவை நேசிப்பவர்கள் உணருகிறார்கள்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

The post அதிகாரத்தைப் பகிர்தல் appeared first on Dinakaran.

Tags : Christianity ,Israel ,Egypt ,
× RELATED உலகளாவிய மலை வழிபாடு