![]()
*தகாத உறவால் கொன்று நாடகமாடிய தம்பி கைது
ஏற்காடு : ஏற்காட்டில் தம்பி மனைவியிடம் ஏற்பட்ட தகாத உறவில், அண்ணனை கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், ஏற்காடு கொம்மக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர்களது மகன்கள் வினோத்(26), விவேக்(25). கூலி தொழிலாளர்கள். வினோத்திற்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். விவேக்கின் மனைவி ெவண்ணிலா(23). ஒரு மகன் உள்ளான். இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர்.
விவேக்கின் மனைவி வெண்ணிலாவுக்கும், வினோத்துக்கும் படிக்கும் காலத்தில் இருந்தே காதல் இருந்துள்ளது. எதிர்பாராத விதமாக, வினோத்திற்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில், திருமணத்திற்கு பிறகும் காதலியான வெண்ணிலாவை அவ்வப்போது வினோத் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார்.
விவேக்கை திருமணம் செய்து கொள்ளுமாறு, வெண்ணிலாவின் வீட்டில் வற்புறுத்த வேறு வழியின்றி அண்ணனை காதலித்த வெண்ணிலா தம்பி விவேக்கை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த பிறகுதான், வினோத், வெண்ணிலாவின் தகாத உறவு, தம்பி விவேக்கிற்கு தெரிய வந்தது. இதையடுத்து மனைவி வெண்ணிலாவிடம், முன்பு நடந்தது நடந்ததாக இருக்கட்டும் இனிமேல் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என விவேக் கண்டித்துள்ளார். ஆனாலும் இவர்களின் உறவு நிடித்து வந்துள்ளது.
இதையடுத்து அண்ணன், தம்பிகள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதை தொடர்ந்து கடந்த 19ம் தேதி மனைவி வெண்ணிலாவை, புதூர் கிராமத்தில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு விவேக் அழைத்துச் சென்று விட்டு விட்டு தனது வீட்டிற்கு திரும்பினார். வரும் வழியில் அண்ணன் வினோத் எதிரே வந்துள்ளார். அப்போது வினோத்திடம் எங்கே சொல்கிறாய் என, விவேக் கேட்டுள்ளார். அப்போது உனது மனைவியைத்தான் பார்க்கச் சொல்கிறேன் என கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த விவேக் அருகே இருந்த கல்லை எடுத்து, வினோத் தலையில் போட்டு தாக்கிவிட்டு, மீண்டும் புத்தூர் கிராமத்திற்குச் சென்று தனது மனைவியிடம் நடந்ததை கூறியுள்ளார்.
மேலும் இதை தொடர்ந்து யார் இதைப்பற்றி கேட்டாலும், வினோத்தை காட்டெருமை மோதி தாக்கியதாக கூற வேண்டும் என வெண்ணிலாவிடம் கூறியுள்ளார். இதற்கிடையே காயமடைந்த வினோத்தை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஏற்காடு போலீசார் விசாரணை நடத்திய போது, வெண்ணிலாவும், விவேக்கும் முன்னுக்கு பின் பதில் அளித்துள்ளனர்.
போலீசார் விசாரணையில் தம்பி விவேக் தான், வினோத்தை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 21ம் தேதி விவேக்கை போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த வினோத் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றினர். பின்னர் சேலம் நீதிமன்றத்தில் விவேக்கை ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.
The post ஏற்காட்டில் பரபரப்பு சம்பவம் அண்ணனை காதலித்தவர் தம்பியை மணந்ததால் கொலையில் முடிந்தது appeared first on Dinakaran.
