×

அசத்தல் சுவையில் சீடை, சீவல், முறுக்குகள் மக்களை கவர்ந்திழுக்கும் கோவில்பட்டி பலகாரங்கள்: சேலத்தில் கமகமக்குது தீபாவளி விற்பனை

சேலம்: கோவில்பட்டியில் பிரபலமடைந்த முறுக்கு, கடலை மிட்டாயை ேதடி அங்கேயே செல்ல தேவையில்லை. தற்போது சேலத்திலேயே கோவில்பட்டியை சேர்ந்த வியாபாரிகள் கடைகள் அமைத்து விற்பனை செய்து வருவதால் சேலம் வாழ் மக்கள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர்.திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுதூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய், மானாமதுரை மல்லிகைப்பூ, பழனி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு, பத்தமடை பாய், பண்ருட்டி பலாப்பழம், சாத்தூர் காராச்சேவு, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, ஊத்துக்குளி வெண்ணெய், சேலம் மாம்பழம் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது. இதில்  அந்தந்த ஊர்களில் தயாராகும் பலகாரங்களை பொறுத்தவரை அவற்றின் சுவையும், மணமும் மட்டுமன்றி தரத்திலும் உயர்ந்து நிற்கிறது. திருநெல்வேலியில்  தயாரிக்கப்படும் அல்வா, இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் விற்கப்பட்டு வருகிறது. இதில் சேலத்தை பொறுத்தவரை தமிழகத்தின் பிறபகுதிகளில் பிரபலமான பலகாரங்களை சேலத்திற்கு கொண்டு வந்து விற்பதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இது போன்ற ஸ்பெஷல் கடைகளை மக்கள் நாடி வருகின்றனர். அந்தவகையில் தமிழகத்தின் தென்பகுதியான கோவில்பட்டியில் பிரபலமான முறுக்கு, கை முறுக்கு, காராச்சேவு, கடலைமிட்டாய், அச்சு முறுக்கு, பால்முறுக்கு, மசாலா முறுக்கு, பட்டர் முறுக்கு, அதிரசம், மிளகுசேவு, பொடிசேவு, சீவல், பூண்டு தட்டை, பூண்டு முறுக்கு, தேன்முறுக்கு, கோதுமை அல்வா, சீடை, மிக்சர் உள்ளிட்ட பலகாரங்கள் சேலத்தில் விற்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.இது குறித்து சேலத்தில் கடை நடத்தி வரும் கோவில்பட்டியை சேர்ந்த வியாபாரிகள் கூறியதாவது:கோவில்பட்டியில் முறுக்கு வகைகள், சீவல், சீடை, அதிரசம், ஜிலேபி உள்ளிட்டவைகள் மிகவும் பிரபலமடைந்த பலகார வகைகளாகும். இந்த பகுதியில் பல்லாயிரம் பேர் ஸ்வீட், காரம் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். கடந்த 30 முதல் 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டிக்கு என்று பிரபலமடைந்த முறுக்கு வகைகள், ஸ்வீட் வகைகள் அங்கேயே தான் விற்கப்பட்டு வந்தது. சமீப காலமாக அந்தந்த ஊருக்கு சிறப்பு வாய்ந்த உணவுப்பொருட்களை மற்ற ஊர்களிலும் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு ஊரில் பிரபலமடைந்த உணவுப்பொருட்கள் அங்கு மட்டும் தான் கிடைக்கும் என்ற நிலைமை மாறி, தற்போது எங்கு வேண் டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்று நிலை வந்துள்ளது.அந்த வகையில் நாங்கள் கோவில்பட்டியில் இருந்து குடும்பமாக சேலம் வந்து கோவில்பட்டி முறுக்கு கடை ஆரம்பித்துள்ளோம். எங்கள் கடைக்கு சேலம் வாழ் மக்கள் முழு ஆதரவை தந்து வருகின்றனர். நாங்கள் சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதால் நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. எங்கள் வியாபாரத்தை பார்த்து கோவில்பட்டியில் இன்னும் பலர் சேலத்தில் கோவில்பட்டி முறுக்கு கடை போட ஆர்வம் காட்டி வருகின்றனர். விரைவில் எங்களை போலவே பலர் இங்கு வந்து கடைபோட வாய்ப்புள்ளது.வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எங்களுக்கு கூடுதல் ஆர்டர் கிடைத்துள்ளது. இதற்காக இரவு, பகலாக ஸ்வீட், காரம் தயாரித்து வருகிறோம். இவ்வாறு வியாபாரிகள் கூறினர். …

The post அசத்தல் சுவையில் சீடை, சீவல், முறுக்குகள் மக்களை கவர்ந்திழுக்கும் கோவில்பட்டி பலகாரங்கள்: சேலத்தில் கமகமக்குது தீபாவளி விற்பனை appeared first on Dinakaran.

Tags : Govilbatti ,Kamagakku ,Salam ,Salem ,Kowilbatti ,Kamagakaku Diwali ,
× RELATED தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி...